அக்டோபரில் முடிவுக்கு வருகிறதா கோலி மற்றும் ரோகித்தின் சர்வதேச கிரிக்கெட் வாழ்வு?

அக்டோபர் மாதம் சிட்னியில் நடைப்பெற உள்ள ஆஸ்திரேலியா அணிக்கெதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டியுடன் ரோகித் மற்றும் கோலி சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறப்போவதாக வெளியான தகவலால் கிரிக்கெட் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

அக்டோபரில் முடிவுக்கு வருகிறதா கோலி மற்றும் ரோகித்தின் சர்வதேச கிரிக்கெட் வாழ்வு?
is the international cricket career of kohli and rohit ending in october

தற்போதைய இந்திய கிரிக்கெட் அணியில் மூத்த வீரர்களாக இருப்பவர்கள் விராட் கோலி மற்றும் ரோகித் ஷர்மா. இவர்கள் ஏற்கெனவே சர்வதேச டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்ற நிலையில் அக்டோபர் மாதத்துடன் ஒருநாள் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறப்போவதாக சில ஊடகங்களில் தகவல்கள் வெளிவந்தன. 

இதனால் இந்திய கிரிக்கெட் அணியின் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்த நிலையில், பிசிசிஐ தரப்பினர் இதுக்குறித்து விளக்கமளித்துள்ளனர். கடந்த 2024 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 29 ஆம் தேதி இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையே நடைப்பெற்ற டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இரண்டாவது முறையாக டி20 கோப்பையினை வென்றது.

கோப்பை வென்ற கையோடு இந்திய அணியின் கேப்டனாக செயல்பட்ட ரோகித் மற்றும் நட்சத்திர வீரர் விராட் கோலி ஆகியோர் சர்வதேச டி20 தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 9 ஆம் தேதி சாம்பியன்ஸ் டிராபி பைனல் போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின. இதில் 4 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்று சாம்பியன்ஸ் கோப்பையினை வென்றது. அப்போதே விராட் கோலி, ரோகித் ஷர்மா ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறப்போவதாக பேச்சுகள் எழுந்தன. அதற்கு இருவரும் மறுப்புத் தெரிவித்தனர். இந்நிலையில் சமீபத்தில் முடிந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு முன்னதாக இந்திய அணி தேர்ந்தெடுக்கப்படும் சமயத்தில் டெஸ்ட் போட்டிகளில் ஓய்வு பெறுவதாக விராட் கோலி, ரோகித் ஷர்மா அடுத்தடுத்து அறிவித்தது விவாதங்களை கிளப்பியது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியுடன் ஓய்வு?

தற்போது விராட் கோலி, ரோகித் சர்மா இருவரும் கடந்த 5 மாதங்களாக சர்வதேச போட்டிகள் எதுவும் விளையாடமல் இருக்கின்றனர். அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஒருநாள் போட்டியில் இந்திய அணி விளையாட உள்ளது. அக்டோபர் 25 ஆம் தேதி சிட்னியில் நடைப்பெறும் போட்டியுடன் ரோகித் மற்றும் கோலி இருவரும் ஒட்டுமொத்தமாக சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெறப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்கு பிசிசிஐ தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, பிசிசிஐ-யின் ஒட்டுமொத்த கவனமும் தற்போது நடைபெற உள்ள ஆசியக் கோப்பை மற்றும் அடுத்த ஆண்டு நடைப்பெற உள்ள டி20 உலகக்கோப்பையில் தான் உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை ரோகித்தும், கோலியும் ஓய்வு பெறும் எண்ணத்தில் இருந்தால் பிசிசிஐ-க்கு முன்னரே தெரிவிப்பார்கள் எனவும் கூறியுள்ளார்கள்.

ஒருநாள் போட்டிக்கான உலகக்கோப்பை 2027 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் நடைப்பெற உள்ளது. 2027 ஆம் ஆண்டு வரை ரோகித், கோலி விளையாடுவார்களா? என்பது மில்லியன் டாலர் கேள்வி என ரசிகர்கள் தரப்பில் கூறப்படுகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow