நெல்லை மேயர் மீதான நம்பிக்கையில்லா தீர்மான கூட்டத்தில் கலந்து கொள்ள திமுக கவுன்சிலர்களுக்கு அமைச்சர் தடை
மேயர் பதவி பறிக்கப்பட்டு ஆளுங்கட்சிக்கு மிகப்பெரும் அவப்பெயர் ஏற்படும் என்பதால் எதிர்ப்பு கவுன்சிலர்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் திமுக தலைமை இறங்கியுள்ளது.
மேயர் மீதான நம்பிக்கையில்லா தீர்மான கூட்டத்தில் யாரும் கலந்து கொள்ளக்கூடாது என நெல்லை மாநகராட்சி திமுக கவுன்சிலர்களுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நெல்லை மாநகராட்சியின் மேயராக திமுக கட்சியை சேர்ந்த சரவணன் இருந்து வருகிறார். அவருக்கும் பாளையங்கோட்டை திமுக சட்டமன்ற உறுப்பினர் அப்துல் வகாப்புக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கட்சிக்குள் பல்வேறு சலசலப்புகள் ஏற்பட்டது.
எனவே அப்துல்வகாப் ஆதரவு கவுன்சிலர்கள் தொடர்ச்சியாக மேயர் சரவணனுக்கு எதிரான நடவடிக்கைககளில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அப்துல் வஹாபின் மாவட்டச் செயலாளர் பதவி பறிக்கப்பட்டது. மேலும் பிரச்னையை முடிவுக்கு கொண்டுவர நெல்லை மாவட்ட பொறுப்பு அமைச்சர் தங்கம் தென்னரசு நியமிக்கப்பட்டார். அவர் மேயரிடம் பிரச்னை செய்யும் பலமுறை கவுன்சிலர்களை எச்சரித்தும் பிரச்சனை ஓய்ந்த பாடு இல்லாமல் மீண்டும் 38 கவுன்சிலர்கள் மேயர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தனர்.
வருகிற 12-ம் தேதி அந்த தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு விவாதம் நடைபெறும் என்று மாநகராட்சி ஆணையாளர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ் அறிவித்துள்ள நிலையில் நேற்று வண்ணார்பேட்டையில் உள்ள தனியார் ஹோட்டலில் வைத்து அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில் மீண்டும் ஒரு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் வருகிற நாடாளுமன்ற தேர்தலில் திமுக கட்சி 40 இடங்களையும் வெற்றி பெற வேண்டும் என்று தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இதற்கான பணியில் மூத்த நிர்வாகிகள் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போது இதுபோல் நீங்கள் எழுப்பும் பிரச்சினையால் கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் என்றும் முதலமைச்சர் சொல்லி தான் சரவணன் மேயராக்கப்பட்டார். அதனால் அனைவரும் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் என்றும் வரும் 12ம் தேதி நடக்கும் மாநகராட்சி வாக்கெடுப்பு கூட்டத்தில் யாரும் கலந்து கொள்ளக் கூடாது என்றும் மீறி சென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரிக்கை கொடுத்ததாக கூறப்படுகிறது.தொடர்ந்து ஒரு மணி நேரத்துக்கு மேலாக இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
கவுன்சிலர்கள் கூட்டத்தை புறக்கணிக்கும் பட்சத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியில் முடிந்துவிடும். அதேசமயம் கவுன்சிலர்கள் கலந்து கொண்டு மேயருக்கே எதிராக வாக்களித்தால் மேயர் பதவி பறிக்கப்பட்டு ஆளுங்கட்சிக்கு மிகப்பெரும் அவப்பெயர் ஏற்படும் என்பதால் எதிர்ப்பு கவுன்சிலர்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் திமுக தலைமை இறங்கியுள்ளது.
What's Your Reaction?