தமிழகத்தில்தான் உயர்கல்வி படித்தோரின் எண்ணிக்கை அதிகம் -சபாநாயகர் அப்பாவு

இந்தியாவிலேயே  தமிழகத்தில்தான் உயர்கல்வி படித்தோரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.இதற்கு காரணம் திராவிட மாடல் ஆட்சிதான்

Jan 11, 2024 - 17:50
Jan 11, 2024 - 18:36
தமிழகத்தில்தான் உயர்கல்வி படித்தோரின் எண்ணிக்கை அதிகம் -சபாநாயகர் அப்பாவு

இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் உயர் கல்வி படித்தோரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.இதற்கு காரணம் திராவிட மாடல்  ஆட்சிதான் என தமிழக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

முத்தமிழ் அறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாணவ சமுதாயம் கலைஞரைப் பற்றி தெரிந்து கொள்ளும் வகையில் தமிழகம் முழுவதும் பள்ளி கல்லூரிகளில் சட்டமன்ற நாயகன் கலைஞர் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடத்தப்பட்டு வருகிறது.இதன் தொடர்ச்சியாக நெல்லை மேலப்பாளையத்தில் உள்ள அன்னை ஹாஜிரா மகளிர் கல்லூரியில் சட்டமன்ற நாயகன் கலைஞர் கருத்தரங்கம் தமிழக சட்டப்பேரவைத்தலைவர் அப்பாவு தலைமையில் நடைபெற்றது.

குழு உறுப்பினர்கள் முன்னாள் சட்டப்பேரவை தலைவர் ஆவுடையப்பன், முன்னாள் சட்டப்பேரவைச் செயலாளர் செல்வராஜ் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. இதல் சட்டப்பேரவையில் கலைஞர், சுயாட்சி, கலைஞரின்  பொருளாதாரம், விவசாயம் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு கருத்துரையாற்றினர்.  

தொடர்ந்து விழாவில் சபாநாயகர் அப்பாவு பேசுகையில், “ஒரு காலத்தில் கல்வி என்பது குலத்தின் அடிப்படையில் வழங்கப்பட்டது.1835 - ஆண்டு லார்டு மைக்கேல் பிரபுதான் அனைவருக்கும் கல்வி என்ற நிலையை உருவாக்கி கட்டாயம் மாநில மொழியில் பாடமாக இடம்பெற வேண்டும் என கொண்டுவந்தார். தந்தை பெரியார் பெண்கல்வி, சம உரிமை வேண்டும் என போராடினார் அதனை நிறைவேற்றியவர் கலைஞர். இதனால்தான் இன்று தமிழகத்தில் பட்டப்படிப்பு படிக்காதவர்களே இல்லை என கூறலாம். பெரியார், காமராஜர், அண்ணா, கலைஞர் ஆகியோர் கல்விக்காவும், பெண்களின் முன்னேற்றத்திற்காவும், சமூக நீதிக்காகவும் ஆற்றிய பணியை மறக்க முடியாது. சமீபத்தில் பீகாரில் மக்கள் தொகை கணக்கெடுக்கப்பட்டது.

அதன்படி உயர்ஜாதியினர் 10.3 சதவீதமும், அரபி மொழி பேசும் முஸ்லீம் 5 சதவீதம் உள்ளனர் இவர்கள் அனைவரும்  பட்டம் பெற்றுள்ளனர். மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 69 சதவீதம் பேரில் 2.3 சதவீதம் பேர் மட்டுமே பட்டம் படித்துள்ளதாக புள்ளிவிபரம் கூறுகிறது.ஆனால் இந்தியாவிலேயே  தமிழகத்தில்தான் உயர்கல்வி படித்தோரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.இதற்கு காரணம் திராவிட மாடல் ஆட்சிதான் என தெரிவித்தார்.

முன்னதாக முன்னாள் சட்டப்பேரவைத்தலைவர் ஆவுடையப்பன் பேசுகையில்,“தந்தை பெரியார் 1920-ல் செங்கல்பட்டில் நடந்த கூட்டத்தில் பெண்கல்வி, பெண்களுக்கு சம உரிமை வேண்டும் என தீர்மானம் கொண்டுவரப்பட்டது. ஆனால் இந்த பெரியாரின் கனவை 60 ஆண்டுகளுக்கு பின் கலைஞர் ஆட்சிப்பொறுப்பேற்றவுடன் இதனை நிறைவேற்றினார்.பெண்கல்வியை ஊக்குவிக்கும் வகையில் 8 படித்தால் 5000, 10 படித்தால் 10 ஆயிரம், 12 படித்தால் 20 ஆயிரம் என திருமண உதவித்தொகை கொடுத்து ஊக்கப்படுத்தியவர் கலைஞர்.பெண்கள் ஆட்சிப்பொறுப்புக்கு வரவேண்டும் என உள்ளாட்சி அமைப்புகளில் 50 சதவீதம் பேர் பெண்கள் பொறுப்பில் உள்ளார்கள். கலைஞர் ஏழ்மையான குடும்பத்தில் இருந்து உழைத்து முன்னேரியவர் அதுபோன்று மாணவச் செல்வங்கள் ஆற்றலை வளர்த்து முன்னேறி உயர் நிலைக்கு வரவேண்டும் என கூறினார்.

இதனைத் தொடர்ந்து வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.இதனைத்தொடர்ந்து பாளையங்கோட்டையில் உள்ள தூய யோவான் கல்லூரி, டவுண் சாப்டர் பள்ளியிலும் சட்டமன்ற நாயகர் கலைஞர் என்ற கருத்தரங்கம் நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன், திமுக மாநில விவசாய தொழிலாளர் அணி துணை செயலாளர் கணேஷ்குமார் ஆதித்தன், தலைமை செயற்குழு உறுப்பினர் சித்திக், ஒன்றிய செயலாளர்கள் பி.சி.ராஜன், ஜோசப்பெல்சி, பகுதி செயலாளர் துபாய்சாகுல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow