2ஜிக்கும் மோடிக்கும் இடையேதான் போட்டி.. சமூகநீதியின் ஹீரோ மோடி.. அடித்துச்சொல்லும் எல்.முருகன்

சமூகநீதியைப் பொருத்தவரை பிரதமர் மோடி தான் ஹீரோ என்று நீலகிரி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளருமான எல்.முருகன் கூறியுள்ளார்

Mar 29, 2024 - 10:47
2ஜிக்கும் மோடிக்கும் இடையேதான் போட்டி.. சமூகநீதியின் ஹீரோ மோடி.. அடித்துச்சொல்லும் எல்.முருகன்

சமூகநீதியைப் பொருத்தவரை பிரதமர் மோடி தான் ஹீரோ என்று மத்திய அமைச்சரும் நீலகிரி மக்களவைத் தொகுதி வேட்பாளருமான எல்.முருகன் கூறியுள்ளார். சமூகநீதி பற்றிப் பேச முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அருகதை இல்லை என்றும் எல். முருகன் கூறியுள்ளார்.

குளுமையான நீலகிரியில் கூட தேர்தல் பரப்புரையில் அனல் பறக்கிறது. திமுக வேட்பாளராக ஆ.ராசா போட்டியிடுகிறார். பாஜக வேட்பாளராக மத்திய அமைச்சர் எல். முருகன் களம் காண்கிறார். தேர்தல் பரபரப்புரைக்கு இடையே செய்தியாளர்களைச் சந்தித்தார் எல். முருகன். அப்போது அவர்,  ஜூன் 4 ஆம் தேதி தெரியும், யார் முதன்மையானவர்கள், யார் பின்னாடி இருக்கிறார்கள் என்று தெரியவரும். பொருத்திருந்து பாருங்கள்.

தமிழ்நாட்டில் இன்று பாஜக, அசுர வளர்ச்சியோடு, பிரதானக் கட்சியாக வளர்ந்திருக்கிறது. நீலகிரியைப் பொருத்தவரை அதிமுக எங்கே இருக்கிறதென்றே தெரியவில்லை. தமிழகம் முழுவதும் அதிமுக அப்படித் தான் இருக்கிறது. தமிழ்நாட்டில் பாஜகவின் கூட்டணி பிரதானக் கூட்டணியாக இருக்கிறது. எங்கள் கூட்டணியின் 39 வேட்பாளர்களும் நாடாளுமன்றம் செல்வார்கள்  என்றார்.

சமூகநீதி குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசி வருகிறாரே என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, “சமூகநீதி பற்றிப் பேசுவதற்கு மு.க.ஸ்டாலினுக்கு எந்தவித அருகதையும் கிடையாது. முதலில் எஸ்.சி. எஸ்.டி. மாணவர்கள் தங்கியுள்ள விடுதிகளைப் பாருங்கள், அவர்கள் வாழும் கிராமங்களைப் பாருங்கள். திமுகவில் மூன்று பட்டியலின அமைச்சர்கள் இருக்கிறார்கள், அதுவும் கடைசி மூன்று இடங்களில் இருக்கிறார்கள். 

பாஜக ஆளும் மாநிலங்களில், பட்டியலினத்தைச் சேர்ந்த கட்சியினர் அனைவரும் துணை முதலமைச்சர் போன்ற பெரிய பதவிகளில் இருக்கிறார்கள். சமூகநீதியை பொருத்தவரை, பிரதமர் மோடி தான் உண்மையான ஹீரோ. போலி சமூகநீதி, போலி திராவிட மாடல் குறித்துப் பேசுபவர்தான் மு.க.ஸ்டாலின்” என்று ஆவேசமாகப் பேசினார்.

திமுகவின் தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்டவை குறித்து பேசிய எல்.முருகன், “திமுக போன தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை இன்று வரை நிறைவேற்றவில்லை. இந்தத் தேர்தலிலும் அப்படித்தான் செய்வார்கள். தேர்தல் பரப்புரையின் போது திமுக பொய்யான வாக்குறுதிகளைக் கொடுக்கிறார்கள். மு.க.ஸ்டாலின் அதர்மத்தின் பக்கமும், பிரதமர் மோடி ஞாயத்தின் பக்கமும் இருக்கிறார்கள். இந்தத் தேர்தல் பிரதமருக்கும், ஸ்டாலினுக்குமான தேர்தல். 

பாஜக 400 தொகுதிகளில் வெற்றிபெற்று,  மோடி 3 ஆவது முறையாக மீண்டும் பிரதமர் ஆவார். இந்தத் தேர்தல் 2ஜிக்கும் மோடிஜிக்கு இடையேயான தேர்தல். ஆனால் மக்கள் மோடிஜி என்று தான் சொல்கிறார்கள் ” என்று உறுதியாகப் பேசினார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow