தமிழகம் அமைதி மாநிலம், தவெக மேடையில் விஜயை அலறவிட்ட ஆற்காடு நவாப்
தவெக சார்பில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் கலந்து கொண்ட ஆற்காடு நவாப் முகமது அலி தமிழகம் அமைதியான மாநிலம், பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் என பேசி மேடையில் இருந்த விஜயை மட்டுமில்லாது விழாவில் கலந்துகொண்ட அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.
சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்த விழாவில், க்யூ-ஆர் கோடுடன் அனுமதி சீட்டு வைத்திருக்கும் தொண்டர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த விழாவில் கலந்துகொண்ட பாதரியார்களுக்கு தவெக தலைவர் விஜய் சால்வை போர்த்தி கெளரவித்தார்.மேடையில் கிறிஸ்துமஸ் குடில் அமைக்கப்பட்டுள்ள நிலையில், பாதரியார்கள் தலைமையில் கிறிஸ்துவ முறைப்படி பிரார்த்தனை கூட்டம் நடைபெற்று வருகின்றது.
கிறிஸ்துமஸ் விழாவில் விஜய் பேசியதாவது: “அன்பும் கருணையும்தான் அனைத்துக்கும் அடிப்படை. இவை இரண்டும் இருப்பதுதான் தாய் மனது. நமது தமிழ்நாட்டு மண்ணும் அப்படிப்பட்ட தாய் அன்பு கொண்ட மண். தாய்க்கு அனைத்து பிள்ளைகளும் ஒன்றுதான். பொங்கல், தீபாவளி, ரமலான், கிறிஸ்துமஸ் என அனைத்து பண்டிகையையும் பகிர்ந்து கொள்வதுதான் நமது ஊர்.
வாழ்க்கை முறையும், வழிபாட்டு முறையும் வேறுவேறு என்றாலும் நாம் அனைவரும் சகோதரர்கள்தான். நான் அரசியலுக்கு வந்தவுடன் கடவுள் நம்பிக்கை உள்ளது என அறிவித்ததற்கு காரணம், உண்மையான நம்பிக்கைதான் நல்லிணக்கத்தை விதைக்கும். மற்றவர்களின் நம்பிக்கையை மதிக்க சொல்லிக் கொடுக்கும். நம்பிக்கை இருந்தால் போதும் அனைத்து பிரச்னையையும் வென்றுவிடலாம்.
நம்பிக்கை குறித்து பல கதைகள் பைபிளில் உள்ளன. அவற்றில் ஒன்று, ஒரு இளைஞருக்கு எதிராக அவரது சகோதரர்கள் அவரை கிணற்றில் தள்ளுகிறார்கள். அதிலிருந்து மீண்ட இளைஞர் நாட்டுக்கே அரசராகி, துரோகம் செய்த சகோதரர் மட்டுமின்றி நாட்டையே காப்பாற்றுகிறார். இந்த கதையை யாரை குறிக்கிறது என்பது நான் சொல்லத் தேவையில்லை.
ஒரு உறுதியை கொடுக்க விரும்புகிறேன். நானும் தவெகவினரும் சமூக நல்லிணக்கத்தை 100 சதவீதம் பாதுகாப்போம். எந்தவித சமரசமும் இருக்காது. அதற்காகதான் நமது கொள்கைக்கு மதசார்பற்ற கொள்கை எனப் பெயர் வைக்கப்பட்டது. கண்டிப்பாக ஒளி ஒன்று பிறக்கும். அந்த ஒளி நம்மை வழிநடத்தும். அனைவரும் உறுதியாக இருங்கள், வெற்றி நிச்சயம்.” எனத் தெரிவித்தார்.
முன்னதாக நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிறப்பு விருந்தினர்கள் சிறப்புரை நிகழ்த்தினர். ஆற்காடு நவாப் முகமது அலி பேசும் போது, தமிழகம் அமைதி மாநிலமாக இருந்து வருகிறது. பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் தமிழகம். பொருளாதாரத்தில் தமிழகம் 2-வது இடத்தில் உள்ளன. திமுக அரசின் ஆதரவான கருத்துக்களை முன்வைத்தார்.
அப்போது மேடையில் இருந்த விஜய், ஆற்காடு நவாப் முகமது அலி பேசிய கேட்டு அதிர்ச்சி அடைந்தார். தவெக மேடைகளில் திமுகவை கடுமையாக அட்டாக் செய்து வரும் நிலையில், ஆற்காடு நவாப் பேச்சு விஜயை மட்டுமில்லாது விழாவில் கலந்துகொண்ட அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
What's Your Reaction?

