களமிறங்காத அன்புமணி! களமிறக்கப்பட்ட தங்கர் பச்சான்...
நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் பாமக வேட்பாளர்களின் பட்டியலை வெளியிட்டது கட்சித் தலைமை
மக்களவைத் தேர்தலில் பாமக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகியுள்ள நிலையில், அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தேர்தலில் களமிறங்கவில்லை என்று தெரிய வந்துள்ளது. அதே சமயம், இயக்குநர் தங்கர் பச்சானுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 19 முதல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை ஜூன் 4-ம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில், அரசியல் கட்சிகள் தங்கள் கூட்டணிகளை இறுதி செய்து, வேட்பாளர் பட்டியல்களை அறிவித்து வருகின்றன. இதற்கிடையே, பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாமக இணைந்துள்ளது. இந்நிலையில், நேற்று பாஜக மற்றும் கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் குறித்த அறிவிப்பை பாஜக தலைமை வெளியிட்டது.
அதில், பாமகவுக்கு 10 மக்களவைத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், பாமக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை, அக்கட்சியின் தலைமை வெளியிட்டுள்ளது. ஒதுக்கப்பட்டுள்ள 10 தொகுதிகளில் 9 தொகுதிகளுக்கான பெயர்கள் வெளியாகியுள்ள நிலையில், காஞ்சிபுரம் தொகுதியின் வேட்பாளர் விவரம் மட்டும் பின்னர் அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. தற்போதைய பட்டியலின்படி, திண்டுக்கல் தொகுதியில் கவிஞர் திலகபாமா, அரக்கோணம் தொகுதியில் வழக்கறிஞர் பாலு, ஆரணி தொகுதியில் முனைவர் கணேஷ் குமார், கடலூரில் இயக்குநர் தங்கர் பச்சான், மயிலாடுதுறையில் ம.க.ஸ்டாலின், கள்ளக்குறிச்சி தொகுதியில் தேவதாஸ் உடையார், தருமபுரி தொகுதியில் அரசாங்கம், சேலத்தில் ந.அன்ணாதுரை, விழுப்புரத்தில் முரளி சங்கர் ஆகியோர் போட்டியிட உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதில், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பெயர் இடம்பெறாததால், அவர் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை என்று தெரிய வருகிறது. அதே நேரத்தில், முதன்முறையாக இயக்குநர் தங்கர் பச்சான் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து இயக்குநர் தங்கர் பச்சானிடம் கேட்டபோது, “பாஜக - பாமக கூட்டணி என்பது தேர்தலுக்கான கூட்டணியே தவிர கொள்கை ரீதியான கூட்டணி அல்ல, காலம் தான் என்னை களத்தில் இறக்கியுள்ளது” என்று தெரிவித்தார்.
What's Your Reaction?