தேர்தல் நடத்தை விதிமீறல்! 208 வழக்குகள் பதிவு...
தேர்தல் ஆணையத்தின் சி விஜில் செயலி மூலம் 723 புகார்கள் பெறப்பட்டுள்ளதாகவும் தேர்தல் ஆணையம் தகவல்
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில், இதுவரை விதிகளை மீறியதாக 208 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல், நாடு முழுவதும் வரும் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி, 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இதையடுத்து, அரசியல் கட்சிகள் பிரசாரங்களில் ஈடுபட்டுள்ள நிலையில், தேர்தல் நடத்தை விதிகள் கடந்த 16-ம் தேதி அமலுக்கு வந்தது. அதன்படி, தேர்தல் ஆணையம், போலீசார் மற்றும் அரசு அதிகாரிகள் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். வாக்காளர்களுக்கு பரிசுப் பொருட்கள் விநியோகம், பணப்பட்டுவாடா போன்றவற்றை தடுக்கும் வகையில், 16 நிலையிலான கண்காணிப்புக் குழு, 16 பறக்கும் படைகள், 16 வீடியோ கண்காணிப்பு குழுவினர் உள்ளிட்டோர் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதில் குறிப்பாக, ரூ.50,000-க்கு மேல் கொண்டுசெல்லப்படும் பணம் மற்றும் மதிப்புள்ள பொருட்களுக்கு உரிய ஆவணங்கள் இல்லையெனில், அவை பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. மேலும், கொண்டு செல்பவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், இதுவரை 208 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு, 208 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அதில் 34 முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார். தேர்தல் ஆணையத்தின் சி விஜில் செயலி மூலம் 723 புகார்கள் பெறப்பட்டதாகக் கூறிய அவர், அதன்மீது விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.
What's Your Reaction?