மெட்ரோ அதிகாரியை தாக்கிய வேல்முருகன் அதிரடி கைது.. எச்சரித்து ஜாமினில் விடுவித்த போலீஸ்
மெட்ரோ ரயில் நிலைய அதிகாரியை தாக்கியதாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பிரபல பாடகர் வேல்முருகனை கைது செய்தனர். இனிமேல் இப்படி செய்ய மாட்டேன் என்று எழுதி வாங்கிக்கொண்டு எச்சரித்து ஜாமினில் விடுவித்தனர்.
"சுப்பிரமணியபுரம்" திரைப்படத்தில் இடம் பெற்ற "மதுர குலுங்க..." என்ற பாடல் பாடி தமிழ் சினிமாவில் பாடகராக அறிமுகமானவர் வேல்முருகன். இதன் பிறகு "ஆடுகளம்" படத்தில் இடம் பெற்ற "ஒத்த சோல்லால" என்ற பாடல் பாடி பட்டித்தொட்டி எங்கும் வேல்முருகன் பிரபலமானார். விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்று பிரபலமானார் வேல்முருகன்.
சென்னை வளசரவாக்கம் பகுதியில் வசித்து வருகிறார் பாடகர் வேல்முருகன். நேற்று இரவு வளசரவாக்கம் ஆற்காடு சாலையில் காரில் வேல்முருகன் சென்று கொண்டிருந்தார். வளசரவாக்கம் ஆற்காடு சாலையில் மெட்ரோ ரயில் பணி காரணமாக தடுப்புகள் அமைக்கப்பட்டு பணிகள் நடந்து கொண்டிருந்தது. அங்கு வந்த பாடகர் வேல்முருகன், ஏன் ரூட் மாற்றி விடப்படுகிறது. முன்னறிவிப்புமின்றி சாலையை ஏன் மூடினீர்கள்? என கூறி அங்கு பணி செய்து கொண்டிருந்த மெட்ரோ ரயில் ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
அப்போது வேல்முருகன் மதுபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனை கண்ட மெட்ரோ திட்ட உதவி மேலாளர் வடிவேல் அங்கு வந்து வேல்முருகனிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் வேல்முருகன் அவரை ஆபாச வார்த்தைகளால் திட்டியதால் வாக்குவாதம் முற்றியது. திடீரென வேல்முருகன் அவரை தாக்கி கீழே தள்ளி விட்டதாக தெரிகிறது.
இதில் அதிகாரி வடிவேலுக்கு காயம் ஏற்பட்டது. அங்கிருந்த ஊழியர்கள் அவரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். சிகிச்சைக்குப் பிறகு வடிவேல் வீடு திரும்பினார். இதையடுத்து மெட்ரோ திட்ட மேலாளர் வடிவேல் விருகம்பாக்கம் போலீசில் புகார் அளித்தார். வேல்முருகன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் அளித்தார். இந்த சம்பவம் குறித்து வேல்முருகன் தரப்பில் இருந்து எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை.
இந்த தாக்குதல் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த விருகம்பாக்கம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் நேற்று இரவு பாடகர் வேல்முருகனை விருகம்பாக்கம் போலீசார் கைது செய்தனர். அவர் மீது ஆபாசமாக திட்டுதல், காயம் ஏற்படுத்துதல் ஆகிய இரு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட பாடகர் வேல்முருகன் காவல் நிலைய ஜாமினில் விடுவிக்கப்பட்டார். எச்சரித்து எழுதி வாங்கி பின் இந்த நடவடிக்கையை காவல்துறையினர் மேற்கொண்டனர். கிராமிய குரலில் பாடல்களை பாடி பிரபலமானதை போல வேல்முருகன் அடிக்கடி சர்ச்சைகளிலும் சிக்கி வருகிறார். கடந்த மார்ச் மாதம் சென்னை விமான நிலையத்தில் மதுபோதையில் தகராறில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் மீண்டும் சர்ச்சையில் வேல்முருகன் சிக்கி உள்ளார். இந்த முறை மெட்ரோ ரயில் அதிகாரியை தாக்கியதாக அவர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டதை அடுத்து கைது செய்யப்பட்டார் வேல்முருகன்.
What's Your Reaction?