எங்க தொட்டாலும் பாக்கெட்டு! கட்டுக் கட்டா பணம்! அலேக்காக தூக்கிய அதிகாரிகள்
மறைத்துக் கொண்டு வந்த ரூபாய் ரூ.13.5 லட்சம் பணம் மற்றும் 103 கிராம் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஆந்திராவைச் சேர்ந்த முதியவரிடமிருந்து கட்டுக் கட்டாக 500 ரூபாய் நோட்டுகளை ரயில்வே பாதுகாப்பு அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளது. இதையடுத்து பணப்பட்டுவாடாவைத் தடுக்கும் நடவடிக்கையாக தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அதனடிப்படையில், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில், ரயில்வே மற்றும் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் தீவிரமாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது வந்த மும்பை எக்ஸ்பிரஸ் ரயிலில் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் தீவிர சோதனை மேற்கொண்ட போது, சந்தேகத்திற்கு இடமாக வந்த ஒரு முதியவரை பிடித்துச் சோதனையிட்டனர். அப்போது அவரிடம் கட்டுக்கட்டாக ரூ.500 நோட்டுகள் இருந்தன. இதனால் சந்தேகமடைந்த ரயில்வே பாதுகாப்புப்படை அதிகாரிகள், விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவரது சட்டையை சோதனை செய்தபோது சட்டைக்குள் அணிந்திருந்த பனியனில் முழுக்க பாக்கெட் தயாரித்து அதன் உள்ளே 500 ரூபாய் கட்டுகள் மறைத்து கொண்டு சென்றது தெரிய வந்தது.
இதையடுத்து, ரயில்வே பாதுகாப்பு படை போலீசார், அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் ஜமாதூர் மெகபூப் பாஷா என்பதும் இவர் ஆந்திர மாநிலம் அதோனில் இருந்து ரயில் மூலம் சென்னை வந்ததும் தெரியவந்தது. மேலும் இவர் மகனுடைய திருமணத்திற்காக சென்னையில் நகை திருமண பத்திரிக்கை வாங்க வந்ததாகவும் விசாரணையில் தெரிவித்துள்ளார். பணத்திற்குண்டான உரிய ஆவணங்கள் அவரிடம் இல்லாததால் அவர் மறைத்துக் கொண்டு வந்த ரூபாய் 13 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் 103 கிராம் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
What's Your Reaction?