சவுக்கு சங்கர் வீடியோவை நீங்குங்கள்.. YOUTUBE நிறுவனத்திற்கு மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீஸ் கடிதம்

பெண் காவலர்கள் குறித்து அவதூறு பரப்பும் வகையில் பேசிய வழக்கில் யூடியூப்பர் சவுக்கு சங்கர் மற்றும் ரெட் பிக்ஸ் யூடியூப்பின் நிறுவனர் பெலிக்ஸ் ஜெரால்டு ஆகியோரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

May 13, 2024 - 11:06
சவுக்கு சங்கர் வீடியோவை நீங்குங்கள்.. YOUTUBE நிறுவனத்திற்கு மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீஸ் கடிதம்


பெண் காவலர்கள் குறித்து அவதூறு பரப்பும் வகையில் பேசிய வழக்கில் யூடியூப்பர் சவுக்கு சங்கர் மற்றும் ரெட் பிக்ஸ் யூடியூப்பின்  நிறுவனர் பெலிக்ஸ் ஜெரால்டு ஆகியோரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 

காவல்துறை அதிகாரிகள், பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், யுடியூப்பர் சவுக்கு சங்கரை கோவை சைபர் கிரைம் காவல்துறையினர் கடந்த 4ஆம் தேதி தேனியில் வைத்து கைது செய்தனர். அப்போது, சவுக்கு சங்கரின் காரில் இருந்து கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் அது தொடர்பாகவும் சவுக்கு சங்கர் மீது வழக்கு பதியப்பட்டது. 

அதன்பின் சவுக்கு சங்கர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.  சென்னையிலுள்ள அவரது வீட்டில் நீதிமன்ற உத்தரவுப்படி தேனி மாவட்ட போலீசார் பூட்டை உடைத்து சோதனையில் ஈடுபட்டி சீல் வைத்தனர். 

சவுக்கு சங்கர் மீது, பெண் பத்திரிக்கையாளர் சந்தியா ரவிசங்கர், தமிழர் முன்னேற்ற படை தலைவர் வீரலட்சுமி ஆகியோர் கொடுத்த புகார்கள் மற்றும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் குறித்து அவதூறு பரப்பியதாக சிஎம்டிஏ நிர்வாகம் கொடுத்த புகார் உள்ளிட்ட 7 வழக்குகள் பதியப்பட்டுள்ளது.

இந்நிலையில் சவுக்கு சங்கர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவிட்டுள்ளார்.

சென்னை, திருச்சி, கோவை, தேனி, உள்ளிட்ட இடங்களில் காவல் நிலையங்களில் சவுக்கு சங்கர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க காவல்துறை உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் குண்டர் தடுப்பு சட்டம் தொடர்பான ஆவணங்கள் கோவை மத்திய சிறை அதிகாரிகளிடம் வழங்கப்பட்டது.

இதன்மூலம் சவுக்கு சங்கருக்கு எதிராக பதிவு செய்யப்பட்டுள்ள 7 வழக்குகளில் 3 வழக்குகள் விசாரணையிலும், 2 வழக்குகளில் குற்றப் பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டும், மீதமுள்ள 2 வழக்குகள் நீதிமன்ற விசாரணையிலும் உள்ளது.

சென்னை உட்பட தமிழகம் முழுவதும் பல்வேறு காவல் நிலையங்களில் பெண் காவலர்கள் குறித்து அவதூறு பேசியதாக வழக்கு பதியப்பட்டுள்ளது. இந்நிலையில் ரெட் பிக்ஸ் யூடியூப்பில் வெளியிடப்பட்டுள்ள பெண் காவலர்கள் குறித்து பேசிய சர்ச்சை வீடியோவை நீக்க சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் YOUTUBE நிறுவனத்திற்கு பரிந்துரை கடிதம் அனுப்பும் நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow