ஸ்டாலினை பற்றி பேசினால் கைது; பாஜகவை பற்றி பேசினால் வேடிக்கை - கரு நாகராஜன் குற்றச்சாட்டு

கைது நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என்றால் அமைதியான முறையில் டிஜிபி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும்.

Jun 19, 2024 - 18:11
ஸ்டாலினை பற்றி பேசினால் கைது; பாஜகவை பற்றி பேசினால் வேடிக்கை - கரு நாகராஜன் குற்றச்சாட்டு

பாஜக பற்றி பேசினால் காவல்துறை மற்றும் அரசு கண்டும் காணாமல் இருப்பதாக பாஜக மாநில துணை தலைவர் கரு நாகராஜன் தெரிவித்துள்ளார்.

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் குறித்து அவதூறு பரப்பும் வகையில் பேசிய இனியவன் என்பவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி டிஜிபி அலுவலகத்தில் கரு நாகராஜன் புகார் அளித்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கரு நாகராஜன், “சமீபத்தில் நடந்த ஒரு கூட்டத்தில் இனியவன் என்பவர் மத்திய நிதி அமைச்சரான நிர்மலா சீதாராமன் பற்றி மிகவும் இழிவாக தரக்குறைவாக பேசியுள்ளார். இந்த கூட்டத்தில் இருந்த திண்டுக்கல் ஐ லியோனியின் தரக்குறைவாக பேசினார். இவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என டிஜிபி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இதே போல பரத்வாஜ் என்பவர் பிரதமர் மோடி மற்றும் அமித் ஷா ஆகியோர் குறித்து மிகவும் தரக்குறைவாக பேசி வருகிறார். தமிழக அரசு மற்றும் தமிழக முதல்வர் குறித்து அவதூறு பரப்பும் வகையில் பேசினால் மட்டும் உடனடியாக நடவடிக்கை எடுத்து குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்வார்கள், ஆனால் பாஜக பற்றி பேசினால் காவல்துறை மற்றும் அரசு கண்டும் காணாமல் இருக்கிறது.

கைது நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என்றால் அமைதியான முறையில் டிஜிபி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும். யூடியூப்பில் இழிவாக பேசுவதை மத்திய அரசு தான் தடுக்க வேண்டும் என டிஜிபி கூறினால், மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து கைது எடுப்போம்” என கூறினார்.

மேலும் அவர் கூறுகையில், “கள்ளக்குறிச்சியில் நான்கு பேர் சாராயம் குடித்து பலியான விவகாரத்தில், சாராயம் குடிக்கவில்லை என கலெக்டர் தவறான கருத்துகளை கூறி வருகிறார். எது குடித்தாலும் போதைக்காக தான் குடிக்கிறார்கள். ஏற்கனவே விழுப்புரம் மாவட்டத்தில் கள்ளசாராயம் குடித்து பல பேர் பலியானார்கள். அதன் பின்பு காவல்துறை சார்பில் நடவடிக்கை எடுத்தார்கள்.

தற்போது மீண்டும் சாராயம் குடித்து பலியாகி உள்ளனர். ஏற்கனவே தமிழ்நாட்டில் போதை பொருள் அதிகரித்து வரும் நிலையில், இன்னும் கள்ளச்சாராயம் முற்றிலுமாக ஒழிக்கப்படவில்லை என்பதற்கு உதாரணம் கள்ளக்குறிச்சி சம்பவம் அமைந்துள்ளது.

கள்ளச்சாராயத்தை காவல்துறை தடுக்க முடியாது தமிழக அரசு தான் தடுக்க வேண்டும். தமிழக அரசு உறங்கினால், காவல்துறையும் தான் உறங்கும். கள்ளக்குறிச்சி விவகாரத்தை முதல்வர் தான் பொறுப்பேற்க வேண்டும்” என குற்றம் சாட்டினார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow