அரசியல் கட்சிகள் ரோடு ஷோ: தமிழக அரசுக்கு எதிராக தவெக நீதிமன்றத்தில் மனுதாக்கல்

அரசியல் கட்சிகளின் ரோடு ஷோக்களை முறைப்படுத்த தமிழ்நாடு அரசு வெளியிட்ட  வழிகாட்டு நெறிமுறைகளை ரத்து செய்யக்கோரி தமிழக வெற்றிக் கழகம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

அரசியல் கட்சிகள் ரோடு ஷோ: தமிழக அரசுக்கு எதிராக தவெக நீதிமன்றத்தில் மனுதாக்கல்
Petition filed in court against Tamil Nadu government

கரூரில் தவெக சார்பில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 உயிரிழந்தனர். இதையடுத்து, உயர்நீதிமன்ற உத்தரவின்படி, அரசியல் கட்சிகள் ரோடு ஷோ நடத்துவதற்கான  வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்த தமிழக அரசு, ஜனவரி 5ம் தேதி அரசிதழில் வெளியிட்டது. 

இந்நிலையில், அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை ரத்து செய்யக் கோரி தவெக இணை பொதுச்செயலாளர் சி.டி.ஆர். நிர்மல்குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார். 

அந்த மனுவில், ரோடு ஷோக்களுக்கு அனுமதி கோரும் அரசியல் கட்சிகளில், அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில்  வழிகாட்டு நெறிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளதால், பதிவு செய்யப்பட்டு அங்கீகாரம் பெறாத கட்சிகள் பாதிக்கப்படும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 வழிகாட்டு நெறிமுறையில் கூறப்பட்டுள்ள நிபந்தனைகள் பின்பற்றுவதற்கு சாத்தியமில்லாத வகையில் உள்ளதாகவும்,  கட்சி நிகழ்ச்சிகளுக்கு அனுமதி பெற முடியாத நிலை ஏற்படும் என்றும் மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த வழிகாட்டு நெறிமுறைகளில் அரசின் பொறுப்புகள்,  கட்சிகள் மீது திணிக்கப்படுவதாகவும் மனுவில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. 

தற்போது அறிவிக்கப்பட்டுள்ள  வழிகாட்டு நெறிமுறைகளுக்கு எதிராக த.வெ.க அளித்த   பரிந்துரைகள் பரிசீலிக்கப்படவில்லை எனவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை ரத்து செய்துவிட்டு, அனைத்து தரப்பினரின் கருத்துகளை பரிசீலித்து, புதிதாக  வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க அரசுக்கு உத்தரவிட வேண்டுமென மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.  இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow