பீதியை கிளப்பிய 2 வாக்காளருக்கு ஒரே மாதிரியான அடையாள எண்: தேர்தல் ஆணையம் விளக்கம்

மேற்கு வங்க மாநிலத்திலுள்ள ஒருவரின் வாக்காளர் அடையாள அட்டை எண்ணும், உத்தரப்பிரதேச மாநிலத்திலுள்ள ஒருவரின் வாக்காளர் அடையாள அட்டை எண்ணும் ஒன்றாக உள்ளது.

Mar 3, 2025 - 17:58
Mar 3, 2025 - 18:07
பீதியை கிளப்பிய 2 வாக்காளருக்கு ஒரே மாதிரியான அடையாள எண்: தேர்தல் ஆணையம் விளக்கம்
Election Voter ID

தேர்தலின் போது ஆள்மாறாட்டத்தைத் தடுக்க புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்பட்டு வருகிறது. அத்தகைய வாக்காளர் அடையாள அட்டையில் புகைப்படத்தினை தவிர்த்து EPIC எண், வாக்காளரின் பெயர், வயது, வசிக்கும் இடம் ஆகியவையும் இடம்பெற்று இருக்கும். இந்நிலையில் 2 நபர்களுக்கு ஒரே மாதிரியான EPIC எண் இருப்பது ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்ட சம்பவம் அரசியல் வட்டாரங்களில் பீதியை கிளப்பியது. அதற்கு தேர்தல் ஆணையம் விளக்கமும் அளித்துள்ளது.

மேற்குவங்க மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்க உள்ள நிலையில், அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இதனிடையே, தற்போதைய மேற்கு வங்க மாநில முதல்வரும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மமதா பானர்ஜி கடந்த வாரம் தேர்தல் ஆணையத்தின் மீதான நம்பகத் தன்மை குறித்து கேள்வி எழுப்பினார். ஆளும் மத்திய அரசின் துணையோடு தேர்தல் ஆணையம் போலி வாக்காளர்களை பட்டியலில் சேர்ப்பதாக கடுமையாக குற்றம் சாட்டினார்.

தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிக்கை:

இதுத்தொடர்பாக சில புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியானதும் பரபரப்பை கிளப்பியது. உதாரணத்திற்கு சொல்ல வேண்டும் என்றால் மேற்கு வங்க மாநிலத்திலுள்ள ஒருவரின் வாக்காளர் அடையாள அட்டை எண்ணும், உத்தரப்பிரதேச மாநிலத்திலுள்ள ஒருவரின் வாக்காளர் அடையாள அட்டை எண்ணும் ஒன்றாக உள்ளது. இது அரசியல் வட்டாரங்களில் கடும் விவாதங்களை கிளப்பிய நிலையில் தேர்தல் ஆணையத்தின் சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதன் விவரங்கள் பின்வருமாறு-

”இரண்டு வெவ்வேறு மாநிலங்களின் வாக்காளர்கள் ஒரே மாதிரியான EPIC எண்களைக் கொண்டிருப்பது தொடர்பான சில சமூக ஊடகப் பதிவுகள் மற்றும் ஊடக அறிக்கைகளை தேர்தல் ஆணையம் கவனத்தில் எடுத்துள்ளது. இது சம்பந்தமாக ஆராய்ந்த போது சில வாக்காளர்களின் EPIC எண்கள் ஒரே மாதிரியாக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால், அதே நேரத்தில் வாக்காளரின் தனிப்பட்ட விவரங்கள், சட்டமன்றத் தொகுதி மற்றும் வாக்குச் சாவடி உள்ளிட்டவை ஒரே EPIC எண்ணைக் கொண்ட வாக்காளர்களுக்கு வேறுபட்டவையாக உள்ளது என்பதை தெளிவுபடுத்தப்படுத்துகிறோம். 

EPIC எண்ணைப் பொருட்படுத்தாமல் பார்த்தால், எந்தவொரு வாக்காளரும் அவர்கள் வாக்காளர் பட்டியலில் பதிவுசெய்துள்ள தங்கள் மாநிலம்/யூனியன் பிரதேசத்தில் உள்ள அந்தந்த தொகுதியில் அவர்களால் நியமிக்கப்பட்ட வாக்குச் சாவடியில் மட்டுமே வாக்களிக்க முடியும். வேறு எங்கும் அவர்களால் வாக்களிக்க இயலாது என்பதையும் தெளிவுப்படுத்துகிறோம்.”

ERONET இயங்குதளத்தில் மாற்றம்:

அனைத்து மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களின் வாக்காளர் பட்டியல் தரவுத்தளத்தை ERONET தளத்திற்கு மாற்றுவதற்கு முன், பல்வேறு மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் வசிக்கும் சில வாக்காளர்களுக்கு ஒரே மாதிரியான EPIC எண்/தொடர் ஒதுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், தற்போது எழுந்துள்ள அச்சங்களைப் போக்க, பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களுக்கு தனிப்பட்ட EPIC எண் ஒதுக்கப்படுவதை உறுதிசெய்ய தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. ERONET 2.0 இயங்குதளம் மூலம் இந்த பிரச்சினை சரி செய்யப்படும்” என தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

ஒருபுறம் தேர்தல் ஆணையம் தரப்பில் விளக்கம் தரப்பட்டிருந்தாலும், இந்த விவகாரத்தை எதிர்க்கட்சிகள் தீவிரமாக வர உள்ள தேர்தல்களில் கையிலெடுக்கக்கூடும் என அரசியல் தரப்பு வட்டாரங்களில் பேச்சு எழுந்துள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow