திரை நட்சத்திரங்களால் களைகாட்டிய வாக்குசாவடி மையங்கள் :  காலையிலேயே வாக்களித்த அஜித், ரஜினி, சிவகார்த்திகேயன்!

தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்குத் தொடங்கிய நிலையில், பொதுமக்கள் மற்றும் திரை பிரபலங்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களது ஜனநாயகக் கடமையை விறுவிறுப்புடன் ஆற்றி வருகின்றனர்.

Apr 23, 2026 - 11:07
திரை நட்சத்திரங்களால் களைகாட்டிய வாக்குசாவடி மையங்கள் :  காலையிலேயே வாக்களித்த அஜித், ரஜினி, சிவகார்த்திகேயன்!
திரை நட்சத்திரங்களால் களைகாட்டிய வாக்குசாவடி மையங்கள்

தமிழகம் முழுவதும் உள்ள 234 தொகுதிகளிலும் இன்று ஒரே கட்டமாகச் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்று வருகிறது. மொத்தம் 4,023 வேட்பாளர்கள் போட்டியிடும் இந்தத் தேர்தலுக்காக, 75 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. காலை 7 மணிக்கே வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.

முதல் ஆளாகப் பதிவு வாக்கை பதிவு செய்த அஜித்

வழக்கம் போல நடிகர் அஜித்குமார், வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே சென்னை திருவான்மியூரில் உள்ள வாக்குச்சாவடிக்குத் தனது மனைவியுடன் வருகை தந்தார். வெள்ளை நிற கோட் சூட் அணிந்து வந்த அவர், 7 மணி அளவில் முதல் நபராகத் தனது வாக்கைப் பதிவு செய்தார். பாதுகாப்பு காரணங்களுக்காக அவர் முன்னதாகவே வாக்களிக்க அனுமதிக்கப்பட்டார். வாக்களித்த பின், தனது விரலில் வைக்கப்பட்ட மையைக் காட்டி அவர் புகைப்படங்களுக்குக் போஸ் கொடுத்தார்.

அனைவரும் வாக்களிக்க வேண்டும்: ரஜினிகாந்த்

நடிகர் ரஜினிகாந்த் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் தனது மகள் சௌந்தர்யாவுடன் வந்து வாக்களித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "வாக்குரிமை உள்ள அனைவரும் கண்டிப்பாகத் தனது கடமையை ஆற்ற வேண்டும்" எனக் கேட்டுக்கொண்டார். 

நடிகர் சிவகார்த்திகேயன் தனது மனைவியுடன் வளசரவாக்கத்தில் வாக்களித்தார். "இந்தத் தேர்தல் சமூக வலைதளங்களின் ஆதிக்கத்தால் மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது; முடிவுகளை அறிய ஆர்வமாக உள்ளேன்" என அவர் தெரிவித்தார்.

மேலும் இசைமைப்பாளர் இளையராஜா, நடிகர்கள் தனுஷ், விக்ரம், பிரபு, விக்ரம் பிரபு, ஜீவா மற்றும் இயக்குநர்கள் அட்லீ, பா. ரஞ்சித் உள்ளிட்ட பல முன்னணி திரைக்கலைஞர்கள் தங்களது வாக்குகளைப் பதிவு செய்துள்ளனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow