அரசியல் காரணத்திற்காக சொத்துக்குவிப்பு வழக்கு... கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் குற்றச்சாட்டு
லஞ்ச ஒழிப்புத்துறை குற்றப்பத்திரிகையில் பல்வேறு முரண்பாடுகள் உள்ளன - அமைச்சர் தரப்பு
வருமான வரி செலுத்திய வருவாயையும் சட்டவிரோதமாக சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை தவறாக குறிப்பிட்டுள்ளது என சொத்துக்குவிப்பு வழக்கில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
2006 முதல் 2010 வரையிலான திமுக ஆட்சியில் வருமானத்திற்கு அதிகமாக ரூ.44.59 லட்சம் சொத்து சேர்த்ததாக அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா்.ராமச்சந்திரன், அவரது மனைவி ஆதிலட்சுமி மற்றும் நண்பர் சண்முகமூா்த்தி ஆகியோா் மீது 2011-ல் லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்தது.
வழக்கை விசாரித்த ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம், அமைச்சர் உட்பட அனைவரும் விடுவித்து உத்தரவிட்டது. இந்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யும் வகையில் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்து, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரித்து வருகிறார். இந்த வழக்கு விசாரணையில், அமைச்சர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், லஞ்ச ஒழிப்புத்துறை குற்றப்பத்திரிகையில் பல்வேறு முரண்பாடுகள் உள்ளதாகவும் போதுமான ஆவணங்களை வழங்கிய பின்னர் அரசியல் காரணங்களுக்காக வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும் முறையிட்டார்.
சுலோச்சனா திரையரங்கு விற்பனை மூலம் கிடைத்த ரூ.37 லட்சம் பங்குதாரர்களின் தொகை தம்முடைய பெயரில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும், என்ன காரணத்திற்காக? யாரிடம் பணம் பெறப்பட்டது என்பதை வங்கி மற்றும் வருமான வரி ஆதாரங்களுடன் குறிப்பிட்டும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த வழக்கிலிருந்து தம்மை விடுவித்த உத்தரவை உறுதி செய்ய வேண்டும் எனவும் வாதிடப்பட்டது. இதையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை விளக்கத்திற்காக வழக்கு ஒத்துவைக்கப்பட்டது.
What's Your Reaction?