பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறை - சொந்த ஊர்களுக்கு படையெடுத்த மக்கள்

சென்னை-கோவை வழக்கமான கட்டணம் ரூ.3,315ல் இருந்து ரூ.14,689 ஆகவும், சென்னை- சேலம் வழக்கமான கட்டணம் ரூ.2,290ல் இருந்து ரூ.11,329 ஆகவும் உள்ளது. 

Jan 13, 2024 - 23:41
பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறை - சொந்த ஊர்களுக்கு படையெடுத்த மக்கள்

பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறையால் மக்கள் சொந்த ஊர்களுக்கு படையெடுத்துள்ளனர்.இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

 தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பண்டிகை வரும் 15ந் தேதியில் இருந்து, 17ந் தேதி புதன்கிழமை வரை சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. மேலும் சனி, ஞாயிறு சேர்ந்து தொடர்ச்சியாக 5 நாட்கள் விடுமுறை வருகிறது. 

இதையடுத்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வசிப்பவர்கள் தங்களுடைய சொந்த ஊர்களுக்கு சென்று பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட முடிவு செய்துள்ளனர். பஸ், ரயில்களில்  முன்பதிவு செய்ய முடியாதவர்கள், இறுதி நேரத்தில் சொந்த ஊர் செல்ல முடிவு செய்தவர்கள், விமான பயணங்களை மேற்கொண்டுள்ளனர்.

இதனால் சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடி, மதுரை, திருச்சி, கோவை, சேலம் ஆகிய நகரங்களுக்கு செல்லும் விமானங்களில் கடந்த ஓரிரு நாட்களாகவே பயணிகள் கூட்டம் அதிகமாக உள்ளது. இன்று சனிக்கிழமை பயணிகள் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக உள்ளது.

சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு  செல்லும் உள்நாட்டு விமானங்களில் டிக்கட்டுகள் கட்டணங்கள் உயர்ந்துள்ளன. ஆனாலும் கட்டண உயர்வை குறித்து கவலைப்படாமல் பயணிகள் போட்டி போட்டுக் கொண்டு கூடுதல் கட்டணங்கள் செலுத்தி விமானங்களில் பயணிக்கின்றனர். 

சென்னை தூத்துக்குடி வழக்கமான கட்டணம் ரூ.3,624 இருந்து இன்று கட்டணம் ரூ.13,639 ஆகவும், சென்னை-மதுரை வழக்கமான கட்டணம் ரூ.3,367ல் இருந்து ரூ.17,262 ஆகவும், சென்னை-திருச்சி வழக்கமான கட்டணம் ரூ.2,264ல் இருந்து ரூ.11,369 ஆகவும் உயர்ந்துள்ளது.

அதேப்போல் சென்னை-கோவை வழக்கமான கட்டணம் ரூ.3,315ல் இருந்து ரூ.14,689 ஆகவும், சென்னை- சேலம் வழக்கமான கட்டணம் ரூ.2,290ல் இருந்து ரூ.11,329 ஆகவும் உள்ளது. 

இதேபோல் கட்டண உயர்வு இருந்தாலும் பலருக்கு டிக்கெட் கிடைக்காமல் தவிக்கின்றனர்.  விழாக்காலங்களில் சிறப்பு ரயில்கள், பஸ்கள் இயக்கப்படுவதுபோல் பயணிகள் கூட்டம் அதிகம் உள்ள நகரங்களுக்கு சிறப்பு கூடுதல் விமானங்கள் இயக்க வேண்டும் என்று பயணிகள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow