"PM cares-ல் இருந்து நிதிகொடுங்கள் ஆளுநரே..!"
“மரபை மீறிய ஆளுநரின் செயல் சரியல்ல ; ஆளுநரின் பேச்சு அவைக்குறிப்பிலேயே இருக்காது”
PM cares-ல் நிதி கொட்டிக்கிடக்கும் நிலையில் அதில் இருந்து 50 ஆயிரம் கோடி ரூபாயை ஆளுநர் ஆர்.என்.ரவி பெற்றுத்தர வேண்டும் என சபாநாயகர் அப்பாவு சாடியிருக்கிறார். அரசின் உரையை சட்டப்பேரவையில் முழுமையாக படிக்காமல் வரலாற்றில் முதன்முறையாக ஆளுநர் ஆர்.என்.ரவி புறக்கணித்த நிலையில், தேசியகீதம் பாடவேண்டும் என வலியுறுத்திவிட்டு, பாடுவதற்கு முன்னதாகவே அவையில் இருந்து அவர் வெளியேறினார்.
நடப்பாண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. அப்போது அரசின் உரையில் உண்மைக்குப் புறம்பான தகவல்கள் உள்ளதாகக் கூறி, மூன்றே நிமிடங்களில் ஆளுநர் உரையை முடித்தார். இவ்வாறாக தமிழ்நாடு வரலாற்றில் முதல்முறையாக சட்டப்பேரவையில் அரசின் உரையை முழுமையாக படிக்காமல் ஆளுநர் புறக்கணித்தார்.
இதைத்தொடர்ந்து ஆளுநர் புறக்கணித்த அரசின் தமிழாக்கத்தை சபாநாயகர் அப்பாவு வாசித்தார். அப்போது இந்தியாவின் வளர்ச்சி வேகத்தை விட தமிழ்நாடு பொருளாதாரம் வேகமாக வளர்கிறது எனவும், ஜி.எஸ்.டி வரியால் மாநிலங்களின் வருமான ஆதாரம் குறைந்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது எனவும் அவர் கூறினார். பேரிடர் காலங்களிலும் பொருளாதார வளர்ச்சியில் தமிழ்நாடு குறிப்பிடத்தக்க சாதனை படைத்துள்ளது எனக்கூறிய அவர், காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க அனைத்து நடவடிக்கைகளையும் தமிழ்நாடு அரசு மேற்கொள்ளும் எனவும் தெரிவித்தார்.
ஜிஎஸ்டி வரியால் தமிழ்நாட்டுக்கு ஆண்டுக்கு 20 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டினார். தொடர்ந்து பேசிய அவர், மரபை மீறிய ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயல் சரியல்ல எனவும் கூறினார். ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியது எதுவும் அவைக்குறிப்பில் இருக்காது எனவும் சபாநாயர் அப்பாவு அறிவித்தார்.
மேலும், புயல், மழைக்கு ஒரு பைசா கூட மத்திய அரசு தரவில்லை எனவும் கணக்கு கேட்க முடியாத அளவுக்கு PM cares-ல் கோடிக்கணக்கில் நிதி கொட்டிக் கிடப்பதாகவும் அப்பாவு விமர்சித்தார். அந்த நிதியில் இருந்து 50 ஆயிரம் கோடி ரூபாயை ஆளுநர் பெற்றுத் தந்தால் நன்றாக இருக்கும் எனவும் அவர் கூறினார். சாவர்க்கர் வழியிலும் கோட்சே வழியிலும் வந்தவர்களுக்கு சட்டமன்றம் சளைத்ததில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
இதனிடையே தேசியகீதம் இனிதான் பாடுவோம் என சபாநாயகர் கூறிக்கொண்டிருந்தபோதே, சட்டப்பேரவையில் இருந்து ஆளுநர் ஆர்.என்.ரவி வெளிநடப்பு செய்தார். தேசியகீதத்துடன் பேரவையைத் தொடங்க வேண்டும் என வலியுறுத்தி அரசின் உரையை புறக்கணித்த ஆளுநர், தேசியகீதம் இசைக்கப்படுவதற்கு முன்பாகவே அவையில் இருந்து வெளியேறியது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?