மதுபாரில் ஏற்பட்ட தகராறில் மருத்துவர் குத்திக்கொலை
போலீசார் தப்பியோடிய நபரை தேடி வருகின்றனர்.
களியக்காவிளை அருகே உள்ள கோழிவிளை அரசு மதுபாரில் ஏற்பட்ட தகராறில் பிசியோதெரபிஸ்ட் மருத்துவரை பார் ஊழியர் கத்தியால் குத்திக்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குமரி மாவட்டம், தமிழக-கேரள எல்லை பகுதியான களியக்காவிளை கோழிவிளை பகுதியில் அரசு டாஸ்மாக் கடை உள்ளது. இந்த கடையோடு சேர்ந்து அரசு மது பாரும் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் மதிய வேளையில் கூட்டப்புளி பகுதியை சேர்ந்த பிசியோதெரபிஸ்ட் மருத்துவரான சுனில் (45) என்பவர் மது அருந்துவதற்காக வந்துள்ளார்.
அப்போது அங்கு பணியில் இருந்த சங்கர் என்ற ஊழியருக்கு சுனிலுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தகராறு நடந்துள்ளது. இதில் ஆத்திரமடைந்த சங்கர் கத்தியால் சுனிலை குத்திவிட்டு தப்பி ஓடி உள்ளார் .
இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த குடிமகன்கள் சத்தம்போட்டு கத்தியபடி பாரை விட்டு வெளியேறி உள்ளனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார் உயிருக்கு போராடியபடி கிடந்த சுனிலை மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதனையடுத்து போலீசார் தப்பியோடிய நபரை பிடிப்பதற்காக தேடி வரும் நிலையில் சம்பவம் நடைபெற்ற பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு மோப்ப நாய் உதவியுடன் விசாரணை நடத்தி வருகின்றனர்.தமிழகத்தில் மூடப்பட்டிருந்த பார்கள் மீண்டும் திறக்கப்பட்டு ஒரு வாரம் ஆவதற்குள் படுகொலை நடைபெற்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
What's Your Reaction?