அனல் பறக்கும் தேர்தல் களம்.. விடாது விரட்டும் பறக்கும் படை .. அரியலூரில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல்
அரியலூர் மாவட்டத்தில் இருவேறு இடங்களில் உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச் செல்லப்பட்ட ரூ.2,58,600 பணத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
லோக்சபா தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 19ஆம் தேதி நடைபெற உள்ளதால் அரசியல் கட்சித்தலைவர்கள் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதற்காக பணத்தை பதுக்கி வைத்திருப்பதாக வந்த புகாரை அடுத்து தமிழ்நாட்டில் பல இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
இது தவிர தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டு பணம், பரிசு பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர். இதுவரை பல கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
அரியலூர் சிறப்பு தாசில்தார் கோவிந்தராசு தலைமையில் தேர்தல் பறக்கும் படையினர் முட்டுவாஞ்சேரி அருகே அம்பலவார்கட்டளை கிராமத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியே இருசக்கர வாகனத்தில் வந்த புண்ணியமூர்த்தி என்பவரை அலுவலர்கள் சோதனையிட்டதில் அவரிடம் ரூபாய் 1,56,600 பணம் இருப்பது தெரியவந்தது. தனியார் நிதி நிறுவனத்திற்காக வசூல் செய்து பணத்தை கொண்டு வந்ததாக புண்ணியமூர்த்தி கூறினார். ஆனால் அதற்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
இதேபோல், செந்துறை அருகே உள்ள ராயபுரம் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது தனியார் நிதி நிறுவனத்தில் பணிபுரியும் கருப்புசாமி என்பவரின் இருசக்கர வாகனத்தை சோதனை செய்தபோது, உரிய ஆவணமின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.1,02,000 பறிமுதல் செய்யப்பட்டது.
அரியலூர் மாவட்டத்தில் ஒரே நாளில் இருவேறு இடங்களில் தனியார் நிதி நிறுவனத்தின் வசூல் பணம் என்று கூறப்பட்ட ரூ.2,58,600 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் உரிய ஆவணங்களை காட்டி பணத்தை பெற்றுக்கொள்ளலாம் என இருவருக்கும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
What's Your Reaction?