பழித்தீர்க்கப்படும் ஜோதிமணி?.. புழல் சிறையிலிருந்து செந்தில்பாலாஜி செக்?.. தலைகீழாக மாறும் கரூர் களம்
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு அனைத்து கட்சி வேட்பாளர்களும் தீவிர பிரசாரங்களில் ஈடுபட்டு வரும் நிலையில், திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி சிட்டிங் எம்.பி.க்கள் மக்களால் விரட்டியடிக்கப்படும் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.
குறிப்பாக கரூர் திமுக கூட்டணி வேட்பாளரும் சிட்டிங் எம்.பி.,யுமான ஜோதிமணியை போகிற இடமெல்லாம் கேள்விக் கணைகளால் கிழித்துத் தொங்க விடுகின்றனர் கரூர் தொகுதி மக்கள்... எந்தப்பக்கம் போனாலும் விரட்டுறாங்களேனு அப்செட் உள்ள ஜோதிமணிக்கு கிளம்பும் எதிர்ப்பானது தானாக உருவான எதிர்ப்பா? அல்லது யாருடைய தூண்டுதலின் பேரில் கிளம்பும் எதிர்ப்பா? என்று விசாரிக்கும்போது தான் சில விஷயங்கள் நம் கவனத்திற்கு வந்துள்ளன...
அதாவது, என்னதான் தொகுதி மக்கள் ஜோதிமணி மீது அதிருப்தியில் இருந்தாலும், அவருக்கு எதிராக கோஷங்களோ பிரசாரத்தின்போது எதிர்க்கவோ நினைக்கவில்லை என்றும், மாறாக செந்தில்பாலாஜி தான் திட்டமிட்டே ஜோதிமணிக்கு எதிராக ஆட்களை இறக்கி அவரை எதிர்க்க அனுப்பியுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன...
செந்தில்பாலாஜி சிறையில் தானே உள்ளார்.. எப்படி அவர் இதை செய்ய முடியும் என்று நினைக்கலாம்? அவர் சிறையில் இருந்தாலும் கொங்கு மண்டலம் முழுவதும் அவர் சொல்வது தான் சட்டம் என்பது இன்றளவும் தொடர்கிறது என்பது அரசியல் வட்டத்தில் பேச்சு. உதாரணமாக கோவையில் பாஜக வேட்பாளர் அண்ணாமலையை எப்படியாவது தோற்கடித்து விட வேண்டும் என்று கருர் கேங் அதாவது செந்தில் பாலாஜி கேங் களம் இறங்கி இருப்பதாகவும், அவர்களை செந்தில் பாலாஜி சிறையில் இருந்தே இயக்கி வருவதாகவும், சமீபத்திய பேட்டியில் தெரிவித்து இருந்தார்.
எப்படி அண்ணாமலைக்கு எதிராக சிறையில் இருந்தே செந்தில் பாலாஜி காய்நகர்த்துவதாக கூறப்படுகிறதோ அதேபோல ஜோதிமணியின் கரூர் தொகுதியையும் ஆட்டிப்படைப்பதாகவும் கூறப்படுகிறது. அதனால் தான் கரூரில் அதிகளவில் உள்ள தன் ஆதரவாளர்களை ஏவி ஜோதிமணியின் பிரசாரத்தில் சிக்கல் செய்து வருகிறார் என்றும் கரூர் காங்கிரசில் புலம்பல் சத்தம் கேட்கிறது.
ஜோதிமணி – செந்தில்பாலாஜி இருவரை பொறுத்தவரையிலும், ஒரு காலத்தில் பாசமலராக வலம்வந்தவர்கள்... 2018 ஆம் ஆண்டு திமுகவில் இணைந்த செந்தில்பாலாஜிக்கு கரூர் மாவட்ட பொறுப்பாளர் பதவி வழங்கப்பட்டது.. 2019 ஆம் ஆண்டு கரூர் தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி வேட்பாளராக இருந்த ஜோதிமணிக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுப்பட்டார் செந்தில்பாலாஜி... அதன் காரணமாக கரூரில் 5 முறை வெற்றி பெற்று விஐபி தொகுதியாக்கிய தம்பிதுரையை 4.20 லட்ச வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார் ஜோதிமணி..
அதேபோல அரவக்குறிச்சி தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட செந்தில் பாலாஜிக்கு, ஜோதிமணியும் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுப்பட்டார்.. தேர்தல் பிரசாரத்தின் போது தனது சகோதரி ஜோதிமணிக்கு ஓட்டு போடுங்க என செந்தில்பாலாஜி சொல்ல, எனது அண்ணன் செந்தில்பாலாஜிக்கு ஓட்டு போடுங்கனு ஜோதிமணி சொல்ல, இந்த பாசமலர் கதை தான் அப்போது பேசு பொருளாக மாறியது...
அதன்பிறகு 2021 சட்டசபை தேர்தலில் கரூர் தொகுதியில் போட்டியிட்ட செந்தில்பாலாஜிக்கு ஆதரவாக பிரசாரம் செய்தார் ஜோதிமணி.. இதில் வெற்றிபெற்று செந்தில்பாலாஜி அமைச்சரானார்.. அதன்பிறகு செந்தில்பாலாஜி – ஜோதிமணி நட்பில் விரிசல் ஏற்பட்டது... ஊரக உள்ளாட்சி இடைத்தேர்தலில் பிரசாரம் செய்ய திமுக சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில், நான் கொஞ்சம் பிசியாக இருக்கிறேன், டேட் அப்பறமா Fix பண்ணி சொல்கிறேன் என்று அடாவடி காட்ட, கரூர் திமுகவினர் ஜோதிமணி மீது கடும் கோபத்தில் இருந்திருந்தனர்...
அதுமட்டுமில்லாமல், மத்திய அரசு திட்டத்தின் கீழ் கரூரில் மாற்றுத்திறனாளிகள் முகாமை நடத்த வேண்டும் என்று உள்ளிருப்பு போராட்டத்தில் ஜோதிமணி ஈடுப்பட்ட நிலையில், அந்த நேரத்தில் அமைச்சராக இருந்த செந்தில்பாலாஜி கரூரில் தான் இருந்தார்.. இருந்தாலும் நேரில் சென்று ஜோதிமணியை சமாதானப்படுத்தவில்லை... இதனைத் தொடர்ந்து, உள்ளிருப்பு போராட்டத்தின் கோரிக்கை நிறைவேற்றப்படும் என்று உத்திரவாதம் பெறப்பட்ட நிலையில் முதல்வர் தொடங்கி அனைவருக்கும் நன்றி தெரிவித்த ஜோதிமணி, உள்ளூர் அமைச்சரான செந்தில்பாலாஜியின் பெயரை குறிப்பிடாமல தவிர்த்தார்...இதனால் செந்தில்பாலாஜி ஆதரவாளர்களின் கோபத்திற்கு ஆளானார் ஜோதிமணி...
இந்த நிலையில் செந்தில்பாலாஜி கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து பல அமைச்சர்கள், கூட்டணி கட்சிக்காரர்கள் போராட்டங்களும் கண்டன ஆர்ப்பாட்டங்களும் நடத்திய நிலையில், ஜோதிமணி மட்டும் இதற்குத்தானே ஆசைப்பட்டேன் பாலகுமாரா என்று மகிழ்ச்சி வெள்ளத்தில் இருந்ததாக சொல்லப்பட்டது.. கரூரில் தனக்கு இடையூறாக இருந்த செந்தில்பாலாஜி சிறைக்குச் சென்றதால், இனி கரூருக்கு தான் தான் டான் என்பதுபோல, திமுககாரர்களை அடிக்கடி ஓபனாகவே அவமானப்படுத்தியதாக கூறப்படுகிறது...
தேர்தல் நேரத்தில் மட்டுமே ஆக்டிவாக இருக்கும் ஜோதிமணி, மீண்டும் மக்களவைத் தேர்தலை முன்னிட்டு ஆக்டிவாக மாறினார்... காங்கிரஸ் சார்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்படாமலே இருந்த நிலையில், மீண்டும் போட்டியிட ஆர்வம் காட்டிய ஜோதிமணிக்கு எதிராக சொந்தக் கட்சிக்காரர்களே போர்க் கொடி தூக்கினர்...
காங்கிரஸ் கோஷ்டி சண்டையை தாண்டி, திமுக மேலிடத்திற்கு செந்தில்பாலாஜி ஆதரவாளர்கள் கொடுத்த பிரஷர் காரணமாக, வேறு வேட்பாளரை அறிவிக்க டெல்லி காங்கிரஸ் மேலிடத்திற்கு திமுக தலைமை வலியுறுத்தியதாக கூறப்படுகிறது... இருந்தாலும் கரூரில் புதுமுகத்தை நிற்க வைத்தால், தேவையற்ற பிரச்னைகள் உருவாகும் என்பதால், திமுக தலைமையின் கோரிக்கையை தாண்டி ஜோதிமணிக்கே மீண்டும் சீட் வழங்கியது...
இந்த நிலையில், மீண்டும் ஜோதிமணிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதால் கரூர் காங்கிரஸார் உச்சக்கட்ட கோபத்தில் இருப்பதோடு, செந்தில்பாலாஜி ஆதரவாளர்கள் களத்தில் இறங்கி வேலை செய்யப்போவதில்லை என்று திட்டவட்டமாக கூறி இருக்கின்றனர்...
தற்போது தீவிரமாக பிரசாரம் மேற்கொண்டு வரும் ஜோதிமணிக்கு போகின்ற இடமெல்லாம் எதிர்ப்பு வரும் நிலையில், இதற்குப் பின்னால் செந்தில்பாலாஜி ஆதரவாளர்கள் தான் இருக்கின்றனர் என்றும், அவர்கள் தான் மக்களைத் தூண்டிவிட்டு ஜோதிமணியை எதிர்க்க வைக்கின்றனர் என்றும், இவர்களுக்குப் பின்னால் செந்தில்பாலாஜி சிறையில் இருந்தே மூளையாக செயல்படுகிறார் என்றும் கூறப்படுகிறது...
அமைச்சர்கள் கக்ரபாணி, அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் எம்.பி.அப்துல்லா ஆகியோர் ஜோதிமணிக்கு ஆதரவாக திமுக களத்தில் இறக்கி இருந்தாலும், இவர்களையெல்லாம் ஓவர்டேக் செய்து ஜோதிமணி எம்.பி. வாழ்க்கைக்கு இறுதி பக்கத்தை செந்தில்பாலாஜி ஆதரவாளர்கள் எழுதிவருவதாக கூறப்படுகிறது...
தற்போது களம் மாறியிருக்கும் கரூர் தொகுதியில், செந்தில்பாலாஜியை தாண்டி ஜோதிமணியால் வெல்ல முடியுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்...
What's Your Reaction?