ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு-தீர்ப்பு ஒத்திவைப்பு
வழிகாட்டு நெறிமுறைகளை பரிசீலிக்க வேண்டும்

நீதிமன்ற உத்தரவிற்கு பிறகும் அணிவகுப்பு ஊர்வலத்திற்கு அனுமதி வழங்காததை எதிர்த்து ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் சென்னை உயர்நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது.
நாட்டின் 76வது சுதந்திர தினம், விஜய தசமி, டாக்டர் அம்பேத்கர் பிறந்த நாள் ஆகியவற்றை முன்னிட்டு தமிழகத்தின் 33 இடங்களில் அணிவகுப்பு ஊர்வலம் நடத்த அனுமதிக் கோரி ஆர்.எஸ்.எஸ். சார்பில் தாக்கல் செய்த மனுக்களை விசாரித்த உயர்நீதிமன்றம், நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கும்படி காவல்துறைக்கு உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில், நீதிமன்றம் உத்தரவிட்டும் ஊர்வலத்திற்கு காவல்துறை அனுமதிக்கவில்லை எனக்கூறி அரசு மற்றும் காவல்துறைக்கு எதிராக ஆர்.எஸ்.எஸ். சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த வழக்கில் உள்துறை செயலாளர் மற்றும் டிஜிபி ஆகியோர் தரப்பில், உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி எதிர்காலத்தில் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்திற்கு அனுமதி அளிக்கும் வகையில் நிபந்தனைகளுடன் கூடிய வரைவு வழிகாட்டு நெறிமுறைகள் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு மீண்டும் நீதிபதி ஜி. ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, ஆர்.எஸ்.எஸ்.தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் ஜி. ஆர்.ராஜகோபால், ஜி.கார்த்திகேயன் ஆகியோர் ஆஜராகி உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின் படி ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி வழங்க வேண்டும் என்று தெரிவித்தார்.
காவல்துறை தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ பொதுமக்களின் பாதுகாப்பை கருதியே வழிகாட்டு நெறிமுறைகளில் கட்டுப்பாடுகளை விதித்துள்ளதாகவும், மிகுந்த கவனத்தோடு தான் இதை கையாண்டுவருவதாகவும் தெரிவித்தார்.
மேலும், இதுதொடர்பாக மூத்த உள்துறை அதிகாரிகளுடனும், காவல்துறை உயர் அதிகாரிகளுடனும் கலந்து ஆலோசித்து தான் இந்த வழிகாட்டு நெறிமுறைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். எனவே இந்த வழிகாட்டு நெறிமுறைகளை பரிசீலிக்க வேண்டும் என்று நீதிபதியிடம் கேட்டு கொண்டார்.
அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதி தள்ளிவைத்தார்.
What's Your Reaction?






