வேலை வாங்கி தருவதாக ரூ.26 லட்சம் மோசடி- முன்னாள் ராணுவ வீரர் கைது
11 நபர்களிடம் ராணுவத்தில் சமையல்காரர் வேலை வாங்கி தருவதாக ஆசைவார்த்தை கூறி தலா 2 லட்சம் விதம் 22 லட்சம் சுருட்டியதும் தெரியவந்துள்ளது.
திருவாரூர் அருகே மத்திய அரசு நிறுவனத்தில் சமையல்கார வேலை வாங்கித்தருவதாக ரூபாய் 26 லட்சம் மோசடி செய்த முன்னாள் ராணுவ வீரர் மற்றும் அவரது மகனை போலீசார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியை பூர்விகமாக கொண்டவர் சண்முகம்(70). ராணுவத்தில் சமையல்காரராக வேலை பார்த்து ஓய்வு பெற்ற இவர் தற்போது பெங்களூருவில் வசித்து வருகிறார்.
இவரது மகன் சுனில் குமார்(36). இவர் இந்திய ராணுவத்தின் ஒரு பிரிவாக பெங்களூருவில் செயல்படும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் சமையல்காரராக வேலை பார்த்து வருகிறார்.
இந்த நிலையில், பெங்களூர் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் சமையல்காரர் வேலை வாங்கி தருவதாக தந்தை, மகன் இருவரும் சேர்ந்து பலருக்கு ஆசை வார்த்தை கூறி லட்சக்கணக்கில் பணம் பெற்று வந்தனர்.
அதன் ஒரு பகுதியாக, திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே புள்ளவராயன்குடிக்காடு கிராமத்தை சேர்ந்த விவசாயி பாண்டியன் (69)என்பவரிடம் அவரது மகன் வெற்றிராஜன் என்பவருக்கு பெங்களூருவில் ராணுவத்தில் சமையல்காரர் வேலை வாங்கி தருவதாக கூறி இருவரும் கடந்த ஜனவரி மாதம் ரூ. 4 லட்சம் பணம் பெற்றனர்.
பின்னர், வேலையும் வாங்கி கொடுக்காமல், கொடுத்த பணத்தையும் திரும்பி தராமல் தந்தையும், மகனும் சேர்ந்து டிமிக்கி கொடுத்து வந்தனர்.அதிர்ச்சியடைந்த பாண்டியன் தான் ஏமாற்றப்பட்டது குறித்து வடுவூர் காவல் நிலையத்தில் கடந்த மாதம் 22ம் தேதி புகார் அளித்தார்.
ஆய்வாளர் (பொ) சிவப்பிரகாசம், உதவி ஆய்வாளர் பிரபு உள்ளிட்டோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இதையடுத்து, இந்த பலே மோசடி வழக்கில் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய ஏதுவாக மாவட்ட எஸ்.பி ஜெயக்குமார், மன்னார்குடி காவல் துணை கண்காணிப்பாளர் அஸ்வத் ஆன்டோ ஆரோக்கியராஜ் தலைமையில் தனிப்படை அமைத்து தேடி வந்தனர். இதில் சண்முகம் மற்றும் அவரது மகன் சுனில்குமார் ஆகிய இருவரும் பெங்களூருவில் பதுங்கியிருப்பது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து டிஎஸ்பி ஆரோக்கியராஜ் அறிவுறுத்தலின்பேரில் தனிப்படையினர் பெங்களூரு சென்று அங்கு பதுங்கியிருந்த தந்தை மற்றும் மகனை கைது செய்து வடுவூர் காவல் நிலையத்துக்கு கொண்டு வந்தனர்.
அவர்களிடம் டிஎஸ்பி விசாரணை நடத்தியதில், பாண்டியனிடம் ரூ.4 லட்சம் வாங்கியதோடு மேலும் வடுவூர் மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த 11 நபர்களிடம் ராணுவத்தில் சமையல்காரர் வேலை வாங்கி தருவதாக ஆசைவார்த்தை கூறி தலா 2 லட்சம் விதம் 22 லட்சம் சுருட்டியதும், மேலும், வந்தவாசி, மதுரை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் ராணுவத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி தந்தை மகனும் சேர்ந்து கோடிக் கணக்கில் முறைகேட்டில் ஈடுபட்டதும் தெரிய வந்தது.இதையடுத்து, வழக்குப்பதிவு செய்து கைது செய்த போலீசார் மன்னார்குடி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் இருவரையும் ஆஜர் படுத்தி பின்னர் சிறையில் அடைத்தனர்.
What's Your Reaction?