எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக வழக்கில் சென்னை ஐகோர்ட் உத்தரவு
 
                                எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பதவியில் நீடிப்பதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட கோ-வாரண்டோ வழக்கில், தேர்தல் ஆணையம் பதிலளிக்க அவகாசம் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2021 ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் எடப்பாடி தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, தனது வேட்புமனுவில் சொத்து, கல்வித் தகுதி உள்ளிட்ட விவரங்களை மறைத்து, தவறான தகவல்களை தெரிவித்துள்ளதாக கூறி, அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ.சுப்புரத்தினம் என்பவர், கோ வாரண்டோ வழக்கை தாக்கல் செய்திருக்கிறார்.
அந்த மனுவில், வேட்புமனுவில் சொத்துக்களையும், கல்வித் தகுதியையும் மறைத்த செயல் தவறான நடத்தை மட்டுமல்லாமல், ஊழல் நடவடிக்கையும் கூட எனத் தெரிவித்துள்ளார். வேட்புமனுவில் சொத்துக்கள் குறித்த விவரங்களை மறைத்ததுடன், எம்.எல்.ஏ.வாக பெற்ற ஊதியத்தையும் அவர் தெரிவிக்கவில்லை என்றும், சொத்து விவரங்களை மறைத்தது தொடர்பாக சேலம் நீதிமன்றத்தில் அவருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும், அந்த வழக்குக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு, சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அதனால் எடப்பாடி தொகுதி எம்.எல்.ஏ.வாக செயல்பட எடப்பாடி பழனிச்சாமிக்கு தடை விதிக்க வேண்டும் எனவும், எந்த தகுதியின் அடிப்படையில் எதிர்க்கட்சித் தலைவராகவும், எம்.எல்.ஏ.வாகவும் பதவியில் நீடிக்கிறார் என விளக்கமளிக்க உத்தரவிடுவதுடன், அவரை பதவி நீக்கம் செய்து, அவருக்கு வழங்கப்பட்ட ஊதியத்தை திரும்ப வசூலிக்க உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்காபூர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, வழக்கு தொடர்பாக பதிலளிக்க தேர்தல் ஆணையம் தரப்பில் அவகாசம் கோரபட்டது.இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை பிப்ரவரி 22ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
What's Your Reaction?
 
                    
                
 
                    
                
 
                    
                
 
                    
                
 
                    
                
 
                    
                
 
                    
                
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

 
                                                                                                                                             
                                                                                                                                             
                                                                                                                                            
 
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                            