ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம்: நியாயமற்ற கட்டுபாடுகள் விதிக்கப்படமாட்டாது-தமிழக அரசு தகவல்
பொதுசொத்துகளுக்கு சேதம் ஏற்பட்டால் வைப்பு தொகையை திரும்பி பெற முடியாது
ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலங்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன எனவும், நியாயமற்ற கட்டுபாடுகள் விதிக்கப்படமாட்டாது எனவும் தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
நாட்டின் சுதந்திர தினம், விஜய தசமி, டாக்டர் அம்பேத்கர் பிறந்த நாள் ஆகியவற்றை முன்னிட்டு தமிழகத்தின் 33 இடங்களில் அணிவகுப்பு ஊர்வலம் நடத்த அனுமதி வழங்க காவல்துறைக்கு உத்தரவிடக் கோரி பல்வேறு மாவட்ட ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகள் பலரும் தாக்கல் செய்த மனுக்களை விசாரித்த உயர் நீதிமன்றம், நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கும்படி காவல்துறைக்கு உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், நீதிமன்றம் உத்தரவிட்டும் ஊர்வலத்திற்கு காவல்துறை அனுமதிக்கவில்லை எனக் கூறி அரசு மற்றும் காவல்துறைக்கு எதிராக ஆர்.எஸ்.எஸ். சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.இந்த வழக்குகளில் உள்துறை செயலாளர் மற்றும் டிஜிபி ஆகியோர் தரப்பில், உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி எதிர்காலத்தில் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்திற்கு அனுமதி அளிக்கும் வகையில் நிபந்தனைகளுடன் கூடிய வரைவு வழிகாட்டு நெறிமுறைகள் தாக்கல் செய்யப்பட்டது.
இதையடுத்து, இந்த வழக்கில் நேற்று தீர்ப்பளித்த நீதிபதி ஜி.ஜெயசந்திரன், ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலங்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன எனவும், நியாயமற்ற கட்டுபாடுகள் விதிக்கப்படமாட்டாது எனவும் தமிழக அரசு தெரிவித்ததை ஏற்றுக்கொண்டு நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளை முடித்து வைத்து உத்தரவிட்டார்.
அதேசமயம், இதுபோன்ற அணிவகுப்புகள் மற்றும் ஊர்வலங்கள் நடத்தும்போது பேனர்கள், பதாகைகள் எடுத்து செல்வதாக இருந்தால், அதற்கு முன்வைப்பு தொகையை செலுத்த வேண்டும் எனவும், ஏதேனும் பொதுசொத்துகளுக்கு சேதம் ஏற்பட்டால் வைப்பு தொகையை திரும்பி பெற முடியாது எனவும் நீதிபதி தன் உத்தரவில் தெரிவித்துள்ளார்.
What's Your Reaction?