ரயில்வே பெண் கேட்கீப்பரிடம் வழிப்பறி செய்த மூவர் கைது

3 பேரை கைது செய்து கடத்தல் மற்றும் வழிப்பறிக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்

Nov 20, 2023 - 14:11
Nov 20, 2023 - 18:40
ரயில்வே பெண் கேட்கீப்பரிடம் வழிப்பறி செய்த மூவர் கைது

சீர்காழி அருகே ரயில்வே பெண் கேட் கீப்பரிடம் வழிப்பறி செய்த மூவரை போலீசார் கைது செய்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம்,வைத்தீஸ்வரன்கோவில் அருகே கன்னியாகுடி ரயில்வே கேட் கீப்பராக பணியாற்றி வருபவர் விஜின் (40).கேரள மாநிலம் அயன்சேரி பகுதியைச்சேர்ந்த இவர் வைத்தீஸ்வரன்கோவிலில் உள்ள ஒரு அபார்ட்மெண்ட்டில் தங்கி கன்னியாகுடி ரயில்வே கேட் கீப்பராக பணியாற்றிவருகிறார்.

இந்நிலையில் கடந்த 12ம்தேதி தீபாவளி அன்று இரவு வைத்தீஸ்வரன்கோவிலில் இருந்து சைக்கிளில் பணிக்கு சென்ற விஜினை 2 மோட்டார் சைக்கிளில் வந்த மூவர் வழிமறித்து கத்தியை காட்டி கடத்திச்சென்றதோடு, அவரிடமிருந்து ரூ.3400ஐ வழிப்பறி செய்ததுடன், இதனை வெளியே சொன்னால் கொலை செய்துவிடுவோம் என்று மிரட்டல் விடுத்து சென்றுள்ளனர்.

இது குறித்து வைத்தீஸ்வரன்கோவில் போலீஸ் நிலையத்தில் விஜின் அளித்த புகாரின் பேரில், இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையிலான போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை கைப்பற்றி தீவிர விசாரணை நடத்தினர்.

இந்நிலையில், போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில் வைத்தீஸ்வரன்கோவில் பகுதியில் சுற்றித்திரிந்த புலவனூர் கிராமத்தைச்சேர்ந்த கணேசன் மகன் கவியரசன்(25). ஆனந்தன் மகன் அபிஷேக்(20). கடலூர் மாவட்டம் தர்மநல்லூர் ஜெயக்குமார் மகன் ஜெயகாந்தன்(19) ஆகிய மூவரையும் கைது செய்ததுடன் அவர்களிடமிருந்து கடத்தல் மற்றும் வழிப்பறிக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.இதனைத்தொடர்ந்து கைது செய்யப்பட்ட மூவரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

-ஆர்.விவேக் ஆனந்தன்

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow