லஞ்ச ஒழிப்புத்துறை வரம்புக்குள் டிஎன்பிஎஸ்சி?-சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

2011ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணைக்கு எந்த  முக்கியத்துவமும் இல்லை

Jan 6, 2024 - 17:02
லஞ்ச ஒழிப்புத்துறை வரம்புக்குள் டிஎன்பிஎஸ்சி?-சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய தலைவர் மற்றும் உறுப்பினர்களை ஊழல் கண்காணிப்பு ஆணையம் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை வரம்புக்குள் கொண்டு வந்து பிறப்பிக்கப்பட்ட திருத்த விதிகள் செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய தலைவர் மற்றும் உறுப்பினர்களை ஊழல் கண்காணிப்பு ஆணையம் மற்றும் லஞ்ச ஒழிப்பு துறையின் வரம்புக்குள் கொண்டு வரும் வகையில் கடந்த 2011 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது.

இந்த அரசாணையை எதிர்த்து தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் அப்போதைய தலைவர் மற்றும் உறுப்பினர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் 2011ம் ஆண்டு வழக்கு தொடர்ந்து இருந்தனர்.இந்த வழக்கு நிலுவையில் இருந்தபோது அரசு பணியாளர் தேர்வாணைய தலைவர் மற்றும் உறுப்பினர்களை ஊழல் கண்காணிப்பு ஆணையம் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை வரம்புக்குள் கொண்டு வந்து தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய விதிகளில் திருத்தம் செய்யப்பட்டது.

இந்தத் திருத்தத்தை எதிர்த்தும், அதை 2011 ஆம் ஆண்டிலிருந்து முன் தேதியிட்டு அமல்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் வழக்கு தொடரப்பட்டிருந்தது.இந்த வழக்குகளை விசாரித்த தலைமை நீதிபதி கங்கா பூர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வு, ஊழல் தடுப்புச் சட்ட பிரிவின்படி அரசு பணியாளர் தேர்வாணைய தலைவர் மற்றும் உறுப்பினர்கள் அரசு ஊழியர்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளதால், அவர்களை ஊழல் கண்காணிப்பு ஆணையம் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை வரம்புக்குள் கொண்டு வந்து அரசு பணியாளர் தேர்வாணைய விதிகளில் திருத்தம் கொண்டு வந்ததை தன்னிச்சையானது என கூற முடியாது என தெரிவித்து விதிகளை உறுதி செய்து தீர்ப்பளித்தது. 

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய விதிகளில் திருத்தம் கொண்டு வர ஆளுநருக்கு அதிகாரம் உள்ளதாக குறிப்பிட்ட நீதிபதிகள், இந்த திருத்த விதிகள் காரணமாக  தேர்வாணைய தலைவர் மற்றும் உறுப்பினர்களின் உரிமை எந்த விதத்திலும் பாதிக்கவில்லை என்றும் சுட்டிக்காட்டி உள்ளனர்.

இந்த விதிகளை முன் தேதியிட்டு அமல்படுத்துவது தவறில்லை எனவும், இந்தத் திருத்த விதிகள் காரணமாக அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தன்னாட்சி அந்தஸ்து எந்த விதத்திலும் பாதிக்கப்படவில்லை என்றும், தவறுகளுக்காக வழக்கு தொடர்வதில் இருந்து தேர்வாணைய தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கு எந்த சட்டப் பாதுகாப்பும் வழங்கப்படவில்லை என்றும் நீதிபதிகள் தங்கள் உத்தரவில் தெளிவுபடுத்தி உள்ளனர்.

 சட்ட விதிகள் இல்லாத நேரத்தில் தேர்வாணைய தலைவர் மற்றும் உறுப்பினர்களை ஊழல் கண்காணிப்பு ஆணையம் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை வரம்பு கொண்டு வந்து 2011ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணைக்கு எந்த  முக்கியத்துவமும் இல்லை என்றும் நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர்.

 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow