"தொகுதி மக்களுக்கு சித்தியாக இருப்பேன்".. பாஜக வேட்பாளர் ராதிகா பிரசாரம்..
தொகுதி மக்களுக்கு சித்தியாக இருந்து குறைகளை நிவர்த்தி செய்ய பாடுபடுவேன் என பாஜக வேட்பாளர் ராதிகா உறுதியளித்துள்ளார்.
மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தமிழ்நாட்டில் ஏப்ரல் 19-ம் தேதி நடைபெற உள்ள நிலையில், திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தில் நட்சத்திர வேட்பாளர்கள் தங்களது தொகுதிகளில் மேற்கொள்ளும் பிரசாரம் மக்கள் கவனத்தை ஈர்த்துள்ளது.
அந்த வகையில் விருதுநகர் மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் நடிகை ராதிகா, தனது கணவர் சரத்குமாருடன் பல்வேறு இடங்களில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், செல்லும் இடங்களில் எல்லாம் பொதுமக்கள் தனக்கு அளிக்கும் வரவேற்பு மிகவும் நெகிழ்ச்சி அளிப்பதாக குறிப்பிட்டார். தன்னால் அரசியலில் 100% உழைப்பை கொடுக்க முடியும் என்ற நம்பிக்கையை தனது கணவர் அளித்ததாகவும், அதனால் தான் முழு நேர அரசியலில் இறங்கியதாகவும் அவர் கூறினார்.
தன்னை வெற்றி பெறச் செய்தால் தொகுதியில் உள்ள குறைகளை உங்கள் அக்காவாக, உங்கள் சித்தியாக இருந்து நிவர்த்தி செய்வேன் என உறுதியளித்த ராதிகா, நரேந்திர மோடி நிச்சயம் 3-வது முறையாக பிரதமர் ஆவார் என நம்பிக்கை தெரிவித்தார். 10 ஆண்டு கால பாஜக ஆட்சியில் ஒரு ஊழல் குற்றச்சாட்டு கூட எதிர்க்கட்சிகளால் கூற முடியவில்லை எனவும், ஆனால் தமிழகத்தில் திமுக ஆட்சியில் அம்மா வீட்டுக்குச் சென்று வருவது போல் மாதம் ஒரு அமைச்சர் சிறைக்கு சென்று வருகிறார் எனவும் விமர்சித்தார்.
பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி தான் என தேசிய ஜனநாயக கூட்டணி அறிவித்த நிலையில், இந்தியா கூட்டணியில் யார் பிரதமர் வேட்பாளர் என்பதில் குழப்பம் நீடிப்பதாகவும், மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் மட்டுமே, பிரதமர் ஆகவே முடியாது எனவும் திட்டவட்டமாக ராதிகா தெரிவித்தார்.
What's Your Reaction?