Rajini: “கல்கி வேற லெவல்... பார்ட் 2க்கு வெயிட்டிங்” ரஜினி மெர்சல்... நாக் அஸ்வின் Speechless!
பிரபாஸ் நடித்துள்ள கல்கி 2898 AD படத்தை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மனம் திறந்து பாராட்டி ட்வீட் செய்துள்ளார்.
சென்னை: நாக் அஸ்வின் இயக்கியுள்ள கல்கி 2898 AD திரைப்படம் 27ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. நாக் அஸ்வின் இயக்கியுள்ள இப்படத்தில் பிரபாஸ், அமிதாப் பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகேன், திஷா பதானி லீடிங் ரோலிலும், துல்கர் சல்மான், ராஜமெளலி ஆகியோர் கேமியோவாகவும் நடித்துள்ளனர். இந்தப் படம் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ளது. இந்நிலையில் தற்போது வெளியான கல்கி முதல் பாகத்தில் அமிதாப் பச்சன் தான் ஹீரோ என ரசிகர்கள் கூறி வருகின்றனர். வில்லனாக நடித்துள்ள கமல்ஹாசன் என்ட்ரியாகும் கடைசி பத்து நிமிடங்கள் தான் கல்கி படத்தின் கூஸ்பம்ஸ் மொமண்ட் எனவும் பாராட்டுகள் குவிகின்றன.
பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இத்திரைப்படம் முதல் நாளில், 191.5 கோடி ரூபாய் வசூலித்து சாதனை படைத்தது. ஆனால் இரண்டாம் நாளான நேற்று இந்தியாவில் மொத்தமே 54 கோடி மட்டுமே கலெக்ஷன் செய்து ஏமாற்றம் கொடுத்துள்ளது. இதனால் பிரபாஸ், இயக்குநர் நாக் அஸ்வின் உள்ளிட்ட படக்குழுவினர் அப்செட்டில் இருக்க, அவர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். கல்கி படத்தை பார்த்துவிட்டு ட்வீட் போட்டுள்ள அவர், “கல்கி பார்த்துவிட்டேன், வாவ்! என்னவொரு தரமான படம், இயக்குநர் நாக் அஸ்வின் இந்திய சினிமாவை வேற லெவலில் கொண்டு சென்றுள்ளார். எனது நண்பர்கள் அமிதாப் பச்சன், பிரபாஸ், கமல்ஹாசன், தீபிகா படுகோன் அனைவருக்கும் வாழ்த்துகள். இப்படத்தின் 2ம் பாகத்திற்கு காத்திருக்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கல்கி படத்தை ரொம்பவே வியந்து பாராட்டியது படக்குழுவினருக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது. ரஜினியின் பதிவை ரீ-ட்வீட் செய்துள்ள இயக்குநர் நாக் அஸ்வின், ”சார் வார்த்தையே இல்ல... மொத்த குழுவினருக்கும் உங்கள் ஆசீர்வாதம்” என்பதாக பதிவிட்டுள்ளார். இதனையடுத்து கல்கி படக்குழுவினருக்கு ரசிகர்களும் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர். சூப்பர் ஸ்டார் ரஜினியின் வேட்டையன் படத்தில், அமிதாப் பச்சனும் இணைந்து நடித்துள்ளார். கல்கி 2898 ஏடி இரண்டாம் பாகத்தில் தான் கமல்ஹாசனின் கேரக்டர் அதிகம் இடம்பெற்றுள்ளதாக தெரிகிறது. ரசிகர்களும் இரண்டாம் பாகத்தை பார்க்க ஆர்வமாக இருப்பதாக தெரிவித்திருந்த நிலையில், சூப்பர் ஸ்டாரும் அதையே கூறியிருக்கிறார்.
What's Your Reaction?