Vishal: விஷால் – லைகா புரொடக்ஷன் மோதல்... க்ளைமாக்ஸுக்கு நாள் குறித்து உயர்நீதிமன்றம்!

நடிகர் விஷாலுக்கு எதிராக லைகா நிறுவனம் தொடர்ந்த வழக்கில், இறுதி விசாரணை ஜூன் 28ம் தேதி தொடங்கும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Jun 12, 2024 - 17:17
Vishal: விஷால் – லைகா புரொடக்ஷன் மோதல்... க்ளைமாக்ஸுக்கு நாள் குறித்து உயர்நீதிமன்றம்!

சென்னை: செல்லமே திரைப்படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் விஷால். தொடர்ந்து சண்டக்கோழி, அவன் இவன், எனிமி, தாமிரபரணி, பூஜை, மார்க் ஆண்டனி உள்ளிட்ட பல படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார். விஷால் நடிப்பில் கடைசியாக வெளியான ரத்னம் படத்துக்கு ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்கள் கிடைத்தன. இந்நிலையில், விஷாலுக்கும் லைகா நிறுவனத்துக்கும் இடையேயான வழக்கு விசாரணையில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதாவது விஷாலின் சொந்த தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பேக்டரி நிறுவனம், சினிமா பைனான்சியர் அன்புச் செழியனிடம் ரூ.21 கோடியே 29 லட்சம் கடன் வாங்கியிருந்தது. 

இதனை லைகா புரொடக்சன்ஸ் நிறுவனம் ஏற்றுகொண்டு, பைனான்சியர் அன்புச் செழியனுக்கு கடனை திருப்பிச் செலுத்தியது. ஆனால், இந்த தொகையை விஷால் சொன்னபடி லைகா நிறுவனத்துக்கு கொடுக்கவில்லை என சொல்லப்படுகிறது. இதனையடுத்து 2021ம் ஆண்டு விஷாலுக்கு எதிராக லைகா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி ரூ.15 கோடி வங்கி கணக்கில் டெபாசிட் செய்யவும், சொத்து விவரங்களை தாக்கல் செய்யவும் விஷாலுக்கு உத்தரவிட்டிருந்தார். இதனை இரு நீதிபதிகள் கொண்ட அமர்வும் உறுதி செய்திருந்தது.  

அதன்பின்னர் இந்த வழக்கு நீதிபதி பி.டி. ஆஷா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது விஷால் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன், லைகாவிற்கும் விஷாலுக்கும் இடையே உள்ள பிரச்சனைக்கு தீர்வு காண சமரச அதிகாரியை நியமிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். இதற்கு பதிலளித்த லைகா தரப்பு வழக்கறிஞர் ஹேமா ஸ்ரீனிவாசன், சமரசத்திற்கு தயார் என விஷால் தரப்பு கூறினாலும் ஆக்கப்பூர்வமாக எதையும் முன்னெடுக்கவில்லை என தெரிவித்திருந்தார். இதனையடுத்து, இந்த வழக்கின் இறுதி விசாரணையை ஜூன் 28ம் தேதிக்கு ஒத்திவைத்தார். 

இதனிடையே, ரத்னம் படத்திற்காக விஷாலுக்கு வழங்க வேண்டிய நிலுவை சம்பளமான 2 கோடியே 60 லட்சம் ரூபாயை, பட தயாரிப்பு நிறுவனமான STONE BENCH FILMS செலுத்தியது. இதனையடுத்து அந்நிறுவனத்தை இந்த வழக்கில் இருந்து விடுவித்து நீதிபதி உத்தரவிட்டார். ஜூன் 28ம் தேதி நடைபெறவுள்ள இறுதி விசாரணையில், விஷாலுக்கு எதிராகவே தீர்ப்பு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.  

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow