அன்புமணி இல்லாமல் பொங்கல் விழா கொண்டாடிய ராமதாசு: பாமகவினர் வருத்தம்
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. நிறுவன டாக்டர் ராமதாஸ் சார்பில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. இந்த மகன் அன்புமணி அவரது குடும்பத்தினர் கலந்து கொள்ளவில்லை.
ஜனவரி 15-ம் தேதி பொங்கல் பண்டிகையை தமிழர்கள் கொண்டாட தயார் ஆகி வருகின்றனர். இதற்கு முன்பாக பள்ளி,கல்லூரிகள்,அலுவலகங்கள், பல்வேறு அமைப்புகள் சார்பில் பொங்கல் விழா நடத்தப்பட்டது. இன்று டெல்லியில் மத்திய அமைச்சர் எல்.முருகன் வீட்டு பொங்கல் விழாவில் பிரதமர் மோடி கலந்துகொண்டார்.
அதே போன்று தலைமை செயலகத்தில் அரசு ஊழியர்கள் ஏற்பாடு செய்திருந்த சமத்துவ பொங்கல் விழாவில் முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி, அமைச்சர், அதிகாரிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இதே போன்று நீலகிரி மாவட்டம் கூடலுரில் பள்ளி சார்பில் நடைபெற்ற பொங்கல் விழாவில் எதிர்கட்சி தலைவர் ராகுல்காந்தி கலந்து கொண்டார்.
இந்நிலையில், திண்டிவனம் தைலாபுரத் தோட்டத்தில் பாமக சார்பில் பொங்கல் விழா நடைபெற்றது. டாக்டர் ராமதாஸ் தலைமையில் நடந்த பொங்கல் விழாவில் அவரது மனைவி சரஸ்வதி அம்மையார், மகள் ஸ்ரீகாந்தி, பா.ம.க. கவுரவ தலைவர் ஜி.கே. மணி, டாக்டர் ராமதாசின் பேரன் முகுந்தன் மற்றும் நிர்வாகிகள் மற்றும் குடும்பத்தினர், மாவட்ட செயலாளர்கள் பொங்கல் விழாவில் கலந்து கொண்டனர்.
இந்த பொங்கல் விழாவில் ஒயிலாட்டம், சிலம்பாட்டம் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.கடந்த ஆண்டு அன்புமணி பங்கேற்ற நிலையில் தற்போது இருவருக்கும் ஏற்பட்ட கருத்து முரண்பாடு காரணமாக அன்புமணி இன்று டாக்டர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற பொங்கல் விழாவில் பங்கேற்கவில்லை. இதனால் தைலாபுரம் தோட்டம் களையிழந்து காணப்பட்டதாக பாமகவினர் வேதனை தெரிவித்தனர்.
What's Your Reaction?

