பகுதிநேர ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு: அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவிப்பு!
தமிழகத்தில் பகுதிநேர ஆசிரியர்களின் ஊதியம் 12,500- லிருந்து 15,000 ஆக உயர்த்தப்படுவதாக அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவித்துள்ளார்.
பணி நிரந்தரம் மற்றும் ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இடைநிலை மற்றும் பகுதிநேர ஆசிரியர்கள் தொடர்ந்து போராட்டங்களை முன்னெடுத்து வந்தனர். இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று பகுதிநேர ஆசிரிய சங்கங்களுடன் அமைச்சர் அன்பில் மகேஸ் ஆலோசனை நடத்தினார். இந்தச் சந்திப்பிற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், பகுதிநேர ஆசிரியர்களின் மாத ஊதியம் ரூ. 12,500-லிருந்து ரூ. 15,000 ஆக உயர்த்தப்படுவதாக அறிவித்தார்.
இதுவரை பகுதிநேர ஆசிரியர்களுக்குக் கோடை விடுமுறை காலமான மே மாதத்தில் ஊதியம் வழங்கப்படாத நடைமுறை இருந்து வந்தது. ஆசிரியர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, இனி வரும் காலங்களில் மே மாதத்திலும் ரூ. 10,000 ஊதியம் வழங்கப்படும் என்று அமைச்சர் உறுதி அளித்துள்ளார். "பொங்கல் திருநாளில் ஆசிரியர்களின் மகிழ்ச்சி வெறும் வார்த்தையில் மட்டும் இல்லாமல், உண்மையாகவே இருக்க வேண்டும் என்ற முதலமைச்சரின் விருப்பத்திற்கிணங்க இந்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன" என்று அவர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.
மத்திய அரசிடமிருந்து வர வேண்டிய எஸ்.எஸ்.ஏ (SSA) திட்டத்திற்கான ரூ. 3,548 கோடி நிதி இன்னும் கிடைக்கவில்லை என்று சுட்டிக்காட்டிய அமைச்சர், நிதி நெருக்கடிக்கு மத்தியிலும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் நலன் கருதி இந்தச் செலவினங்களைத் தமிழக அரசே ஏற்றுச் செயல்படுத்துவதாகத் தெரிவித்தார். மேலும், பணியின் போது உயிரிழந்த 200 இடைநிலை ஆசிரியர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்குவது குறித்து முதலமைச்சரிடம் பரிந்துரை செய்துள்ளதாகவும் அவர் கூறினார்.
ஆசிரியர்களின் பிரதான கோரிக்கையான பணி நிரந்தரம் குறித்துத் தொடர்ந்து அதிகாரிகளுடன் ஆலோசனைகள் நடத்தப்படும் என்றும், இது தொடர்பாக ஆசிரிய சங்கங்கள் தெரிவித்துள்ள கருத்துகளையும் அரசு பரிசீலிக்கும் என்றும் அமைச்சர் தெரிவித்தார். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகியுள்ள இந்த ஊதிய உயர்வு அறிவிப்பு, போராட்டத்தில் ஈடுபட்டு வந்த பகுதிநேர ஆசிரியர்கள் மத்தியில் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
What's Your Reaction?

