புழுக்கள் கலந்த குடிநீர் விநியோகம் - தஞ்சை மக்களுக்கு உடல் உபாதை ஏற்படும் அபாயம்..!
தஞ்சை மாநகராட்சிக்கு உட்பட்ட ராமகிருஷ்ணாபுரம் பகுதியில் விநியோகிக்கப்படும் சுகாதாரமற்ற குடிநீரால் பொதுமக்களுக்கு உடல் உபாதை ஏற்படும் அச்சம் நிலவுகிறது.
தஞ்சை மாநகராட்சியின் 40-வது வார்டுக்கு உட்பட்ட ராமகிருஷ்ணாபுரம் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதிக்கு மாநகராட்சி சார்பில் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இந்த சூழலில் அங்குள்ள ஒன்று முதல் மூன்று தெருக்களுக்கு மாநகராட்சி சார்பில் விநியோகிக்கப்படும் குடிநீர் புழுக்கள் கலந்து வருவதாக கூறப்படுகிறது. சல்லடையில் வடிகட்ட முடியாத அளவிற்கு புழுக்கள் மிக மெல்லியதாக இருப்பதால், வேறு வழியின்றி அந்த தண்ணீரை கொதிக்க வைத்து குடிப்பதாக அப்பகுதியில் வசிக்கும் மக்கள் குமுறுகின்றனர்.
புழுக்கள் கலந்த குடிநீர் குறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் கடந்த 10 நாட்களாக கூறியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் அப்பகுதி மக்கள் மனம் வெதும்புகின்றனர். அதிகாரிகளின் அலட்சியத்தால், சுகாதாரமற்ற குடிநீரை ராமகிருஷ்ணாபுரம் பகுதி மக்கள் அருந்துவதால் வாந்தி, பேதி மற்றும் நோய்தொற்று பரவும் அச்சம் நிலவுகிறது.
மக்களுக்கு உடல் உபாதை ஏற்படும் முன் மாவட்ட நிர்வாகம் இந்த விவகாரத்தில் தலையிட்டு சுகாதாரமான குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுப்பதுடன், அலட்சியமாக செயல்படும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்னர்.
What's Your Reaction?