நிதிநிலை அறிக்கை - அரசியல் கட்சிகளின் கருத்து என்ன?

Feb 19, 2024 - 16:45
நிதிநிலை அறிக்கை - அரசியல் கட்சிகளின் கருத்து என்ன?

நிதியமைச்சர் தங்கம் தென்னரசு 2023 - 2024ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தமிழ்நாடு சட்டமன்றத்தில் தாக்கல் செய்தார். இது குறித்து பிற கட்சித் தலைவர்கள் தெரிவித்துள்ள கருத்துக்களைப் பார்க்கலாம்.

அண்ணாமலை :

கடந்த 3 ஆண்டுகளாக தமிழ்நாடு பட்ஜெட்டில் அறிவித்திருந்த வெற்று அறிவிப்புகளையே இந்த ஆண்டு பட்ஜெட்டிலும் அறிவித்து, மீண்டும் ஒரு முறை திமுக அரசு மக்களை ஏமாற்றி இருப்பதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சாடியிருக்கிறார். அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ஆறுகள் மறுசீரமைப்பு, புதிய பேருந்துகள் போன்ற அறிவிப்புகள், ஆண்டுதோறும் பட்ஜெட் அறிக்கையில் மட்டுமே இடம்பெறும் அலங்கார வார்த்தைகள் ஆகிவிட்டனவே தவிர, கடந்த 3 ஆண்டுகளாக இவை எதுவும் செயல்படுத்தப்படவில்லை என்று குற்றஞ்சாட்டியுள்ளார். தற்போது அறிவித்துள்ள திட்டங்கள் பெரும்பாலும் மத்திய அரசின் திட்டங்கள்தான், திட்டங்களின் பெயரை மட்டும் மாற்றிவிட்டால் போதும் என்று திமுக நினைக்கிறதா? என்று அண்ணாமலை கேள்வி எழுப்பியிருக்கிறார்.

ஜி.கே.மணி :

நாடாளுமன்றத் தேர்தலை முன்வைத்து நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக பாமக சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே.மணி கூறியிருக்கிறார். சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்துவது குறித்து அறிவிப்பு நிதிநிலை அறிக்கையில் இடம்பெறாதது, தங்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை அளித்துள்ளது. பெரிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு இருக்க வேண்டும் ஆனால் அதற்கான அறிவிப்பும் வரவில்லை என்று ஜி.கே.மணி கூறியிருக்கிறார். 

செல்வபெருந்தகை :

காலத்திற்கு ஏற்ப மக்களுக்கு ஏற்ப நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வ பெருந்தகை கூறியிருக்கிறார். தமிழ்நாடு அரசின் நிதி நிலை அறிக்கை குறித்து சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மத்திய அரசின் ஆதரவு இல்லை என்றாலும், தமிழ்நாடு அரசின் நிதியை வைத்து சிறப்பான நிதி நிலை அறிக்கையை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு வழங்கி உள்ளதாக கூறினார். 

வைகோ  :

"தடைகளை தாண்டி -வளர்ச்சியை நோக்கி" எனும் 2024-25 நிதிநிலை அறிக்கை, தமிழ்நாட்டின் சமச்சீரான வளர்ச்சிக்கும்,"எல்லோருக்கும் எல்லாம்" என்னும் திராவிட இயக்க அடிப்படைக் கோட்பாட்டின் வெற்றிக்கும் அடித்தளம் அமைத்திருக்கிறது. தமிழ்நாட்டு அரசின் நிதி நிலை அறிக்கையை பாராட்டி மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அறிக்கை வெளியிட்டுள்ளார்.

வேல்முருகன் :

நிதிச் சுமை இருந்தாலும் நிதி மேலாண்மையை தமிழ்நாடு அரசு சிறப்பாக கையாண்டுள்ளதாக தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார். சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தோம் ஆனால் இந்த நிதி நிலை அறிக்கையில் மத்திய அரசுக்கு வேண்டுகோளை விடுத்துள்ளோம் என்ற தெரிவித்திருப்பது கவலை அளிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். பீகார், ஆந்திரா, ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களே சாதி வாரி கணக்கெடுப்பை நடத்தும்போது தமிழ்நாடு அரசு அதேபோல் சாதி வாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்ற வேண்டுகோளை தொடர்ந்து முன்வைப்பதாக வேல்முருகன் தெரிவித்துள்ளார். 

கொங்கு ஈஸ்வரன் :

அனைத்து மக்களின் வளர்ச்சியையும் உள்ளடக்கியதாக இந்த நிதிநிலை அறிக்கை உள்ளதால், கொங்கு நாடு மக்கள் கட்சியின் சார்பாக வரவேற்பதாக அக்கட்சியின் தலைவர் கொங்கு ஈஸ்வரன் தெரிவித்துள்ளார். டெல்டா மாவட்டங்களுக்கும், மேற்கு மாவட்டங்களுக்கும் அதிக திட்டங்கள் இருப்பதைப் போல வட மாவட்டங்களுக்கும் அதிக முக்கியத்துவம் தர வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். 
5-ம் வகுப்பு வரை உள்ள காலை சிற்றுண்டி திட்டத்தை 8-ம் வகுப்பு வரை உள்ள மாணவ மாணவிகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow