ராமேஸ்வரம் மீனவர்கள் மீது நடுக்கடலில் தாக்குதல்.. இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்.. இதற்கு முடிவே இல்லையா? 

Apr 9, 2024 - 12:21
ராமேஸ்வரம் மீனவர்கள் மீது நடுக்கடலில் தாக்குதல்.. இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்.. இதற்கு முடிவே இல்லையா? 

ராமேஸ்வரம் மீனவர்கள் மீது நடுக்கடலில் இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தியதில், இருவர் படுகாயம் அடைந்துள்ளனர்.

வங்கக்கடலில் மீன் பிடிக்க செல்லும் ராமேஸ்வரம், உள்ளிட்ட தமிழக  மீனவர்கள் மீது இலங்கை கடற்படை நடுக்கடலில் தாக்குதல் நடத்துவது, கைது செய்வது, படகுகள், வலைகளை சேதப்படுத்துவது, துப்பாக்கியால் சுட்டுக் கொல்வது போன்ற அட்டூழியங்களில் பல ஆண்டுகளாக ஈடுபட்டு வருகின்றனர். தற்போது மீண்டும் தமிழ்நாட்டு மீனவர்களை இலங்கை கடற்படை விரட்டி அடித்து இருக்கிறது. 

இதனைதடுக்க வேண்டும் என தொடர்ந்து மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கையைவைத்து வந்தாலும், இதற்கு நிரந்தர தீர்வு இதுவரை காணப்படவில்லை. தற்போது இந்திய அரசியலில் கச்சத்தீவு குறித்து பேசப்பட்டு வருவதால், தமிழக மீனவர்களின் மீது  இந்தத் தாக்குதல் நடந்துள்ளதாக சந்தேகம் எழுந்துள்ளது. மேலும் வரும் 15ஆம் தேதி முதல் 61 நாட்களுக்கு மீன்பிடித்தடைக் காலம் அமல்படுத்தபட உள்ளது.

தொடர் அச்சம் காரணமாக, நேற்று காலை ராமேஸ்வரத்தில் இருந்து 250 க்கும் குறைவான படகுகளில் மீனவர்கள் ஆழ்கடலில் மீன்பிடிக்கச் சென்றனர். இவர்கள் தனுஷ்கோடி - கச்சத்தீவு இடையே மீன் பிடித்துக்கொண்டு இருந்தனர்.

அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் ராமேஸ்வரம் மீனவர்களின் விசைப் படகுகளை மறித்து, விரட்டி அடித்து இருக்கிறார்கள். ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற மெக்கான்ஸ், தங்கம் ஆகிய இருவரை நடுக்கடலில் வைத்து இலங்கை கடற்படையினர் சரமாரியாக  தாக்கியதில் இருவருக்கும் தலை மற்றும் உடலில் பல இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது. அவர்கள் ராமேஸ்வரம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்பட்டது தொடர்பாக காயமடைந்த மீனவர்களிடம் ராமேஸ்வரம் மீன் வளத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதில் படகுகளும் சேதம் அடைந்துள்ளன. இதன் காரணமாக மீன்கள் ஏதும் பிடிக்காமல் பதறியடித்துக்கொண்டு கரைக்கு திரும்பினர். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow