"ரோஹித் வெமுலா தலித்தே அல்ல!" ஸ்மிருதியை விடுவித்த காங்கிரஸ் ! வெமுலா தாயுடன் நின்ற ராகுல் - நாடகமா?

நாட்டையே உலுக்கிய ஐதராபாத் பல்கலைக்கழக ஆய்வு மாணவர் ரோஹித் வெமுலா தற்கொலை வழக்கில், அவர் ஒரு தலித்தே இல்லை என தெலங்கானா போலீசார் வழக்கை முடித்து வைத்துள்ளது. அதோடு குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான ஸ்மிருதி இரானி உள்ளிட்ட பாஜகவினரை, மாநிலத்தில் நாடாளுமன்றத் தேர்தலுக்கு 10 நாட்களே உள்ள நிலையில் ஆளும் காங்கிரஸ் அரசு விடுவித்துள்ளது

May 4, 2024 - 10:56
"ரோஹித் வெமுலா தலித்தே அல்ல!" ஸ்மிருதியை விடுவித்த காங்கிரஸ் ! வெமுலா தாயுடன் நின்ற ராகுல் - நாடகமா?

ஆந்திராவின் குண்டூர் மாவட்டத்தில் "மாலா" என்ற பட்டியலினத்தைச் சேர்ந்த குடும்பத்தில் பிறந்த ரோஹித் வெமுலா, தந்தை ஓடிப்போக தாயின் தையல் தொழில் மூலம் ஐதராபாத் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். தனது சிறந்த கல்வித்திறனால் மெரிட்டில் இணைந்த அவர், அங்கும் கல்வியில் அபாரத்துடன் செயல்பட்டு வந்தார். அம்பேத்கர் மாணவர் அமைப்பில் தன்னை இணைத்துக் கொண்டு பணியாற்றிய அவருக்கும் பாஜகவின் மாணவர் அமைப்பான ABVP-க்கும் போராட்டம் தொடர்பாக பிரச்னை ஏற்பட்டது.

இதனை தங்களுக்கு நெருக்கமான MPயும் அப்போதைய இணை அமைச்சருமான பண்டாரு தத்தாத்ரேயிடம் ABVP எடுத்துச் செல்லவே, அவர் அதை மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியிடம் எடுத்துச்செல்ல நண்பர்களுடன் பல்கலைக்கழக நிர்வாகத்தால் வெமுலா இடைநீக்கம் செய்யப்பட்டார். அப்போது அம்பேத்கர் படத்துடன் பல்கலைக்கழகத்தை விட்டு அவர் வெளியேறிய புகைப்படம் இன்று வரை சாதிப்போராளிகளால் பயன்படுத்தப்படுகிறது.

எவ்வளவோ போராடியும் பல்கலைக்கழகத்தில் தன்னை சேர்த்துக்கொள்ள மறுத்ததால், சாதியப்போக்குடன் அணுகுவதற்கு பதில் எங்களை கருணைக்கொலை செய்து விடுங்கள் என துணைவேந்தர் அப்பாராவுக்கு கடிதம் எழுதிய ரோஹித் வெமுலா, 2016ம் ஆண்டு ஜனவரி 17ம் தேதி தற்கொலை செய்துகொண்டார். நாட்டையே உலுக்கிய இந்த சம்பவம் தற்போது புதிய புயலைக் கிளப்பியுள்ளது. 8 ஆண்டுகளுக்குப்பிறகு தெலங்கானா போலீசார் தரப்பில் ரோஹித் வெமுலா வழக்கை முடித்து வைப்பதற்கான இறுதி அறிக்கை உயர்நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்டுள்ளது.

அதில் ரோஹித் வெமுலா தலித்தே இல்லை - அவரது சாதிச்சான்றிதழ் போலியாக உருவாக்கப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது. வெமுலாவின் தாய் ராதிகா தலித் பிரிவு என்றபோதும், அவரது தந்தை OBC பிரிவைச் சேர்ந்தவர் எனவும், ராதிகா கணவரைப் பிரிந்து வாழ்ந்ததால் தன்னை SC என அடையாளப்படுத்தியதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. தனது சாதி வெளிப்பட்டால் பிரச்னையாகி விடும் என எண்ணி அவர் தற்கொலை செய்து கொண்டதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. இதன் காரணமாக அப்போதைய எம்.பி பண்டாரு தத்தாத்ரேயா, மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, MLC என்.ராம்செந்தர் ராவ் ஆகிய அனைத்து பாஜக தலைவர்களும் துணைவேந்தர் பி.அப்பாராவும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

காங்கிரஸ் ஆட்சியில் உள்ள தெலங்கானாவில், அனைத்து 17 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் மே 13ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், 10 நாட்களுக்கு முன்னதாக இந்த அறிக்கை வெளியாகியுள்ளது. வெமுலாவின் தற்கொலைக்கு நீதிகேட்டு ஆம்ஆத்மியின் அரவிந்த் கெஜ்ரிவால், AIMIM கட்சித்தலைவர் அசாதுதீன் ஓவைசி உள்ளிட்டோருடன் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தியும் கண்டனம் தெரிவித்ததாக சமூக ஆர்வலர்கள் நினைவு கூர்கின்றனர். குறிப்பாக நாடாளுமன்றத்தில் இந்த விவகாரத்தை பூதாகரமாக்கியதில் ராகுல்காந்திக்கு முக்கியப் பங்குண்டு என அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். அதே நேரத்தில் பாரத் ஜோடோ யாத்திரையின்போது வெமுலாவின் தாய் ராதிகாவுடன் அவர் இணைந்து நடந்த புகைப்படங்கள் இணைத்தில் வைரலானது. தொடர்ந்து காங்கிரஸ் ஆளும் தெலங்கானாவில் வெமுலாவுக்கு அநீதி நிகழ்த்தப்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். 

இந்நிலையில் வெமுலாவின் தாய் உள்ளிட்டோருக்கு வழக்கு தொடர்பாக சந்தேகங்கள் எழுந்துள்ளதால், வழக்கை மேலும் விசாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் இதற்கு மாஜிஸ்திரேட்டின் அனுமதி கோரி மனுத்தாக்கல் செய்யப்படும் எனவும் தெலங்கானா காவல்முறை இயக்குநர் ரவிகுப்தா அறிவித்துள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow