12ம் வகுப்பு படித்துவிட்டு போலி மருத்துவம்.. இளம்பெண்ணை கைது செய்த போலீசார்...
ராணிப்பேட்டை மாவட்டம்வாலாஜா சத்திரம் புதூர் பகுதியில் போலி மருத்துவர் கைது செய்யப்பட்டார்.
வாலாஜா சத்திரம் புதூர் பகுதியில் போலி மருத்துவர் மருத்துவம் பார்ப்பதாக மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை உதவி மருத்துவருக்கு தகவல் கிடைத்தது. அதன் மருத்துவக் குழுவினர் மற்றும் காவல்துறையினர் இணைந்து சத்திரம் புதூர் பகுதியில் இயங்கி வரும் கீர்த்தனா கிளினிக்கில் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்கு திவ்யா என்பவர் நோயாளி ஒருவருக்கு ஊசிபோட தயாராகிக் கொண்டிருந்ததாகத் தெரிகிறது. தொடர்ந்து அவரிடம் ஆவணங்களை கேட்டபோது அவர் முன்னுக்கு பின் முரனாக பதில் அளித்து ஆவணங்களை சமர்ப்பிக்கவில்லை.
தொடர்ந்து அவரிடம் நடத்திய விசாரணையில் 12ம் வகுப்பு வரை மட்டுமே படித்ததாகவும், ஆங்கில மருத்துவம் பார்ப்பதற்கு எந்தவித முறையான படிப்பும் படிக்காமல் போலியாக மருத்துவம் பார்த்ததும் தெரியவந்தது.
இதனையடுத்து மருத்துவ குழுவினர் மாத்திரைகள், ஊசிகள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்து, கிளினிக்கிற்கு சீல் வைத்தனர். மேலும் போலி மருத்துவர் திவ்யாவை கைது செய்து சிப்காட் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
மேலும் மாவட்டத்தில் போலியாக கிளினிக் வைத்து மருத்துவம் பார்த்தால் காவல்நிலையத்தில் தகவல் தெரிவிக்க வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிரண் ஸ்ருதி பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.
மக்களின் உயிரை காப்பாற்றும் புனிதமான துறையைில் இது போன்ற போலி மருத்துவர்களால் அந்த துறைக்கே கலங்கம் ஏற்படுவதாக மக்கள் குமறுகின்றனர்.
What's Your Reaction?