விரைவில் கைது செய்யப்படுவார் பிரஜ்வால் ரேவண்ணா...புளூ கார்னர் நோட்டீஸ் அனுப்பிய S.I.T

பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள பிரஜ்வால் ரேவண்ணாவுக்கு கிரிமினல் வழக்கு பதியப்பட்டு, வெளிநாடு தப்பிச் சென்றவரை பிடிக்க அனுப்பப்படும் புளூ கார்னர் நோட்டீஸை சிறப்பு புலனாய்வு குழு அனுப்பியுள்ளது. 

May 5, 2024 - 21:36
May 5, 2024 - 22:04
விரைவில் கைது செய்யப்படுவார் பிரஜ்வால் ரேவண்ணா...புளூ கார்னர் நோட்டீஸ் அனுப்பிய S.I.T

நாட்டின் முன்னாள் பிரதமரும், மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவருமான ஹெச்.டி.தேவகவுடாவின் பேரன் பிரஜ்வால் ரேவண்ணா. கர்நாடகாவின் ஹாசன் தொகுதியின் மக்களவை உறுப்பினராக உள்ள அவர், தற்போது பாஜக கூட்டணி சார்பில் அதே தொகுதியில் போட்டியிடுகிறார். இந்நிலையில், அவர் மீது கர்நாடகத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் பாலியல் புகார் அளித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதன் அடிப்படையில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், அவருக்கு எதிராக 8,000 பென் டிரைவ்களில் ஏறத்தாழ 3,000 ஆபாச வீடியோக்கள் வெளியாகி மேலும் அதிரடித்தது. 

இந்தப் புகாரை, முதலமைச்சர் சித்தராமய்யாவின் உத்தரவின் அடிப்படையில், சிறப்பு புலனாய்வுக் குழு விசாரித்து வந்தது. மேலும் பிரஜ்வால் ரேவண்ணா மீது, பாலியல் வன்கொடுமை புகாரைத் தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது. தொடர்ந்து சிறப்பு தணிக்கைக் குழுவும் பிரஜ்வால் ரேவண்ணா மீது வழக்குப் பதிவு செய்தது. மேலும், நீதிமன்றத்தில் பாதிக்கப்பட்ட பெண் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார். அதன் அடிப்படையில், பாலியல் வன்கொடுமைக்கான சட்டப்பிரிவும் எஃப்.ஐ.ஆரில் கூடுதலாக சேர்க்கப்பட்டது. தொடர்ந்து பிரஜ்வல் ரேவண்ணா வெளிநாடு தப்பிச் சென்றுள்ள நிலையில் அவருக்கு எதிராக விமான நிலையங்களுக்கு 2-வது லுக் அவுட் நோட்டீஸ் கொடுக்கப்பட்டது.  இந்த நிலையில்தான் வெளிநாடு தப்பிச் சென்றுள்ள பிரஜ்வல் ரேவண்ணாவை கைது செய்ய சிபிஐ  தற்போது ப்ளூ கார்னர் நோட்டீஸ் விடுத்துள்ளது. ஒருவர் மீது கிரிமினல் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டால், அவரை பிடிப்பதற்காக வெளிநாட்டுக்கு அனுப்பப்படுவது ப்ளூ கார்னர் நோட்டீஸ் ஆகும். இப்போது புளூ கார்னர் நோட்டீஸ் விடுக்கப்பட்டுள்ளதால் ஜெர்மனியில் உள்ள பிரஜ்வால் ரேவண்ணா கைது செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

மேலும், பிரஜ்வால் ரேவன்ணாவின் தந்தை, எச்.டி ரேவண்ணா மீது பாலியல் புகார் எழுந்த நிலையில், அவர் கைது செய்யப்பட்டு, விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow