சிறுமியை கடித்து குதறிய நாய்கள்.. உரிமையாளர் கைது.. சென்னை மாநாகராட்சி ஆணையர் புது உத்தரவு
சென்னை பூங்காவை விளையாடிக்கொண்டிருந்த சிறுமியை நாய்கள் கடித்து குதறியதில் பலத்த காயங்களுடன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். நாய் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், நாய், பூனை போன்ற பிராணிகளை வீட்டில் வளர்ப்பவர்கள் கட்டாயம் உரிய வளர்ப்பு உரிமம் பெற வேண்டும் என மாநகராட்சி ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை ஆயிரம் விளக்கு மாடல் பள்ளி பகுதியில் உள்ள மாநகராட்சி பூங்காவில் காவலாளியாக பணிபுரிந்து வருபவர் ரகு. இவர் தனது உறவினரின் துக்க நிகழ்வில் கலந்துகொள்ள நேற்று மாலை (05.05.2024) வெளியில் சென்றுள்ளார். அதனால் அவரது மனைவி மோனிஷா பூங்காவின் பாதுகாப்பு பணியில் இருந்ததாக கூறப்படுகிறது. அவருடன் அவரது 5 வயது மகள் சுபஷா என்பவரும் இருந்துள்ளார்.
சிறுமி பூங்காவில் நேற்று இரவு 9 மணியளவில் விளையாடிக் கொண்டிருந்துள்ளார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த புகழேந்தி என்பவர் இரண்டு வளர்ப்பு நாயை அழைத்துக் கொண்டு பூங்காவிற்கு நடைப்பயிற்சிக்கு வந்துள்ளார்.
அப்போது யாரும் எதிர்பாராதவிதமாக திடீரென விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை புகழேந்தியின் 2 வளர்ப்பு நாய்களும் கடித்து குதறி உள்ளது. இதனால் சிறுமி கதறி அழுததைக் கண்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து நாயை விரட்டிவிட்டு சிறுமியை மீட்டனர்.
நாய்கள் கடித்து குதறியதில் தலையில் பலத்த காயமடைந்த சிறுமி ஆபத்தான நிலையில் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு பின்னர் தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். சிறுமியின் மருத்துவ செலவை புகழேந்தி ஏற்றுக் கொள்வதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
அதே சமயம் வளர்ப்பு நாயின் உரிமையாளர் புகழேந்தி, அவரது மனைவி தனலட்சுமி, மகன் வெங்கடேசன் உள்ளிட்ட 3 பேர் மீது 2 பிரிவின் கீழ் ஆயிரம் விளக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சிறுமியை கடித்து குதறிய வளர்ப்பு நாய்களின் உரிமையாளர் புகழேந்தி கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தியாவில் வளர்க்க தடை செய்யப்பட்ட ராட்வைலர் இன நாய்களை வைத்திருந்ததாக போலீசார் தரப்பில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி பூங்காவில் 5 வயது சிறுமியை வளர்ப்பு நாய்கள் கடித்து குதறிய சம்பவம் அந்த பகுதி மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே சிறுமியை நாய் கடித்த விவகாரம் குறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு விளக்கம் அளித்தார். அப்போது அவர் “சிறுமியை கடித்த ராட்வைலர் நாய்களுக்கு உரிமையாளர்கள் வளர்ப்பு உரிமம் பெறவில்லை என விசாரணையில் தெரியவந்துள்ளது. ஏன் உரிமம் பெறவில்லை என விளக்கம் கேட்டு உரிமையாளர் புகழேந்திக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து உரிய விசாரணைக்குப் பின்னர் கால்நடைத்துறை உடன் ஆலோசித்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தெருவில் திரியும் நாய்களாக இருந்தாலும் அதற்கு இணைக்கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து மீண்டும் பிடித்த இடத்திலேயே விட வேண்டும் என்பது தான் மாநகராட்சிக்கு உச்ச நீதிமன்ற உத்தரவிட்டுள்ளது.
நாய், பூனை போன்ற பிராணிகளை வீட்டில் வளர்ப்பவர்கள் கட்டாயம் உரிய வளர்ப்பு உரிமம் (லைசென்ஸ்) பெற வேண்டும். அதோடு வளர்ப்பு பிராணிகளுக்கு தவறாமல் தடுப்பூசி செலுத்த வேண்டும் எனத் தெரிவித்தார்.
What's Your Reaction?