கோடிக்கணக்கில் போதை பொருள் கடத்தல்.. திமுகவில் இருந்து ஜாபர் சாதிக் நீக்கம்..! - துரைமுருகன் அதிரடி உத்தரவு
போதைப் பொருள் கடத்தில் ஈடுபட்டதாக திமுகவை சேர்ந்த ஜாபர் சாதிக் மீது அண்ணாமலை குற்றஞ்சாட்டியிருந்த நிலையில் கட்சியிலிருந்து நிரந்தரமாக நீக்குவதாக திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
டெல்லியில், போதைப் பொருள் தடுப்பு போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் 50 கிலோ போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. கடத்தலில் ஈடுபட்டதாக 3 பேரை கைது செய்த நிலையில் அவர்கள் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. இந்த கடத்தல் பின்னணியில், தமிழ் சினிமா திரைப்பட தயாரிப்பாளரான ஜாபர் சாதிக், நடிகர் மைதீன், அரசியல் பிரமுகர் சலீம் ஆகியோர் மூளையாக செயல்பட்டதும் விசாரணையில் அம்பலமானது.
இவர்களில் ஜாபர் சாதிக் என்பவர் திமுகவின் சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஜாபர் சாதிக், கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வந்ததால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்பிலிருந்து நிரந்தரமாக நீக்கி வைக்கப்படுகிறார் என்று திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். மேலும் ஜாபர் சாதிக்குடன் கட்சியினர் எந்தத் தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, திமுகவில் முக்கியப் பொறுப்பில் இருக்கும் ஒருவரே, இத்தனை ஆண்டுகளாக சென்னையில் இருந்து கொண்டு போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்திருப்பது, பலத்த சந்தேகங்களை எழுப்பியிருக்கிறது. எனவே, உடனடியாக தமிழக அரசு போதைப் பொருள் கடத்தலில் தொடர்புடைய அனைவரையும் கண்டறிந்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.
What's Your Reaction?