5 ஆண்டுகளுக்குப் பின் மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் தொடக்கம்...
மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கான பணியை வாஸ்து பூஜையுடன் எல் & டி நிறுவனம் இன்று(05.03.2024) தொடங்கியது.
மதுரை தோப்பூரில் 221 ஏக்கர் பரப்பளவில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கு, கடந்த 2018-ம் ஆண்டு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. 2019-ம் ஆண்டு ஜனவரியில் ரூ.1,264 கோடி மதிப்பிலான மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் நரேந்திர மோடி. மொத்தம் 10 தளங்களுடன் 870 படுக்கை வசதிகளுடன் நவீன இயந்திரங்களைக் கொண்டு இம்மருத்துவமனை அமையும் என அறிவிக்கப்பட்டது. மொத்த தொகையில் 82 சதவீதம் ஜெய்க்கா நிறுவனம் கடனாக தருவதாகவும் மீதி 18 சதவீதத் தொகையை மத்திய அரசு வழங்கும் எனவும் அறிவிக்கப்பட்டு, சுற்றுச்சுவர் மட்டும் கட்டப்பட்டது. அதன் பிறகு எய்ம்ஸ் மருத்துவமனைக் கட்டுமானப் பணி கிடப்பில் போடப்பட்டது.
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் ஒரே ஒரு செங்கலை வைத்து இது தான் மத்திய அரசு அமைத்துக் கொடுத்துள்ள மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை என அமைச்சர் உதயநிதி சாடியது பேசுபொருளானது. இந்நிலையில், சுமார் 5 ஆண்டுகளுக்குப் பிறகு மருத்துவமனை கட்டுமானப் பணிகளை தொடங்கியுள்ளது எல் & டி நிறுவனம். இதற்கான வாஸ்து பூஜை இன்று(05.03.2024) நடைபெற்றது. மருத்துவமனை கட்டுமானப் பணிகள் வரும் 2026-ம் ஆண்டுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் இது குறித்து மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தனது எக்ஸ் தள பக்கத்தில், "ஒரு ரகசிய திட்டத்தைப் போல மதுரை எய்ம்ஸின் கட்டுமானப் பணி இன்று துவக்கப்பட்டுள்ளது, கடந்த வாரம் பிரதமர் மதுரைக்கு வந்தார். அப்பொழுது அவரை வைத்து துவக்கி இருக்கலாம், அடிக்கல் நாட்டு விழாவுக்கும் திட்டத்தின் துவக்க நிகழ்வுக்கும் இடையே 5 ஆண்டு என்ற புதிய சாதனையை தேசம் அறிந்திருக்கும்" என பதிவிட்டுள்ளார்.
What's Your Reaction?