SBI வங்கி காலக்கெடு ஓவர்... தேர்தல் பத்திர விவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்..! எந்த கட்சிக்கு எவ்வளவு போச்சுனு தெரியுமா..?

தேர்தல் பத்திரங்கள் தொடர்பாக 300 பக்கத்திற்கும் மேற்பட்ட இரண்டு பட்டியல்கள் வெளியிடப்பட்டுள்ளன

Mar 14, 2024 - 22:08
SBI வங்கி காலக்கெடு ஓவர்... தேர்தல் பத்திர விவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்..! எந்த கட்சிக்கு எவ்வளவு போச்சுனு தெரியுமா..?

இந்தியாவில் உள்ள கட்சிகள் தேர்தல் பத்திரங்கள் மூலம் எவ்வளவு நிதி பெற்றிருக்கின்றன என்ற விவரங்களை எஸ்.பி.ஐ வழங்கிய நிலையில், அவற்றை தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வ இணைய தளத்தில் வெளியிட்டுள்ளது.

தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிக்கும் முறையை பாஜக அரசு  கடந்த 2017ஆம் ஆண்டு அமல்படுத்தியது. இதில் எஸ்பிஐ வங்கி விற்பனை செய்த தேர்தல் பத்திரங்கள் வாயிலாக பலர் நன்கொடை கொடுத்து வந்தனர். 

இதேவேளையில் நாடு முழுவதும் இம்முறைக்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், இதுதொடர்பான வழக்கு 5 பேர் கொண்ட உச்சநீதிமன்ற நீதிபதிகளின் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அந்த விசாரணையின் முடிவில், இந்த முறை செல்லாது என தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம் மார்ச் 6 ஆம் தேதிக்குள் எஸ்.பி.ஐ அனைத்து விவரங்களை வெளியிட வேண்டும் என உத்தரவிட்டது. 

இதில் மேல்முறையீடு செய்த எஸ்.பி.ஐ 4 மாதம் கால அவகாசம் கோரியது. இதற்கு கண்டனங்களை தெரிவித்த நீதிபதிகள், "எஸ்.பி.ஐ-ஆல் முடியாத உத்தரவை பிறப்பிக்கவில்லை. அதனால் மார்ச் 13ஆம் தேதிக்குள் கட்டாயம் தேர்தல் பத்திர விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் வழங்க வேண்டும். தேர்தல் ஆணையம் அதனை அதிகாரபூர்வ இணையதளத்தில் வெளியிட வேண்டும்" என உத்தரவிட்டது. 

உச்சநீதிமன்ற உத்தரவின்படி எஸ்பிஐ தேர்தல் பத்திரங்கள் தொடர்பான தகவல்களை தங்களிடம் வழங்கியுள்ளதாக தேர்தல் ஆணையத்தின் செய்தித் தொடர்பாளர் தனது அதிகாரப்பூர்வமான எக்ஸ் பக்கத்தில் இரண்டு நாட்களுக்கு முன்பாகத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், தேர்தல் ஆணையம் தற்போது அந்தப் பட்டியலைத் தனது அதிகாரபூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. தேர்தல் பத்திரங்களை வங்கியில் கொடுத்து எந்தெந்த கட்சிகள் ரொக்கமாக மாற்றின என்ற விவரங்களும் வெளியிடப்பட்டுள்ளன.

இது தொடர்பாக 300 பக்கத்திற்கும் மேற்பட்ட இரண்டு பட்டியல்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதில்,

முதல் பட்டியலில் பத்திரத்தை வாங்கிய நிறுவனங்களின் பெயர்கள், எந்த தேதியில் அவை வாங்கப்பட்டன, பத்திரத்தின் தொகை ஆகிய விவரங்கள் உள்ளன.

இரண்டாவது பட்டியலில் அவை எந்தெந்த அரசியல் கட்சிகளுக்கு எந்தத் தேதியில், எவ்வளவு தொகை வழங்கப்பட்டன என்ற விவரங்கள் இடம்பெற்றுள்ளன.

இந்தப் பட்டியலில் அதிகம் நிதி பெற்ற கட்சியாக இருப்பது ஆளும் பாஜக, அதற்கடுத்த இடங்களில் காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் போன்ற காட்சிகள் உள்ளன. 

இதில், வேதாந்தா நிறுவனம், முத்தூட் பைனான்ஸ் நிறுவனம், டி.வி.எஸ் நிறுவனம், சன் ஃபார்மா, மேகா இன்ஜினியரிங், பஜாஜ் ஆட்டோ, பஜாஜ் பினான்ஸ், பாரதி ஏர்டெல், பாரதி இன்ப்ரா டெல், பினோலெக்ஸ் கேபிள் நிறுவனம் உள்ளிட்ட பல நிறுவனங்கள் தேர்தல் பத்திரங்களை நன்கொடைகளாக வழங்கி உள்ளன. மேலும் மிகப்பெரிய கட்டுமான நிறுவனங்களில் ஒன்றான டி.எல்.எஃப் நிறுவனமும் பல்வேறு காலகட்டங்களில் தேர்தல் பத்திரங்களை நன்கொடையாக அரசியல் கட்சிகளுக்கு வழங்கியிருப்பது தெரியவந்துள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow