ராஜ்நாத் சிங் தலைமையில் தேர்தல் அறிக்கை குழு அமைத்த பாஜக.. எப்போது வெளியாகும்?
பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் பாஜக தேர்தல் அறிக்கை குழு அமைக்கப்பட்டுள்ளது.
மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளன. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். இதற்காக நாடு முழுவதும் அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
முன்னதாக மக்களவைத் தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் அறிக்கை ஏப்ரல் 5-ம் தேதி வெளியிடப்படும் என தகவல் வெளியானது. இந்த நிலையில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் தேர்தல் அறிக்கை குழுவை பாஜக தலைமை அமைத்துள்ளது.
இது தொடர்பாக பாஜக தேசிய பொதுச்செயலாளர் அருண் சிங் வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களவைத் தேர்தலுக்கான பாஜக தேர்தல் அறிக்கை குழுவை பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா அறிவித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இதன் தலைவராக ராஜ்நாத் சிங்கும், ஒருங்கிணைப்பாளராக நிர்மலா சீதாராமனும், இணை ஒருங்கிணைப்பாளராக பியூஷ் கோயலும் நியமிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் தேர்தல் அறிக்கை குழுவில் மத்திய அமைச்சர்கள் அர்ஜூன் முண்டா, கிரண் ரிஜிஜூ, அஸ்வினி வைஷ்ணவ், தர்மேந்திர பிரதான், ஸ்மிருதி இராணி, குஜராத் முதலமைச்சர் பூபேந்தர் படேல், அசாம் முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா, சத்தீஸ்கர் முதலமைச்சர் விஷ்ணு தியோ சாய், மத்தியப் பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், முன்னாள் முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் மற்றும் ராஜஸ்தான் மாநில முன்னாள் முதலமைச்சர் வசுந்தரா ராஜே சிந்தியா உள்ளிட்ட 24 பேர் உறுப்பினர்களாக இடம்பெற்றுள்ளனர்.
மாநிலங்கள் வாரியாக உறுப்பினர்கள் இடம்பெற்றுள்ள இந்தக் குழு, தேர்தல் அறிக்கையை தயாரித்து விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
What's Your Reaction?