உக்கிரமான சூரியன்.. 43 டிகிரி வரை எகிறும் வெப்பம்.. வீசும் வெப்ப அலை.. உஷார்.. வானிலையின் எச்சரிக்கை

தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்ப அலை வீசக்கூடும் என எச்சரித்துள்ள தேசிய வானிலை மையம், கடும் வெயிலால் வெப்பம்  43 டிகிரி செல்சியஸ் வரை வீசக்கூடும் என எச்சரித்துள்ளது. மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால் மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Apr 30, 2024 - 10:04
உக்கிரமான சூரியன்.. 43 டிகிரி வரை எகிறும் வெப்பம்..  வீசும் வெப்ப அலை.. உஷார்.. வானிலையின் எச்சரிக்கை

அக்னி நட்சத்திரம் ஆரம்பிக்கும் முன்னரே வெயில் வாட்டி வதைத்து வருகிறது. தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுமைக்குமே இந்த நிலைதான். பொதுவாக தமிழகத்தில் 34 முதல் 40 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாகி வருகிறது. இந்நிலையில், தேசிய வானிலை மையத்தின் அறிக்கை அதிர்ச்சிக்குள்ளாக்க வைக்கிறது. 

இந்தியா முழுமைக்குமான வானிலை ரிப்போர்ட்டை தேசிய வானிலை மையம் வெளியிட்டுள்ளது. அதில், தமிழகத்தின் உள்மாவட்டங்களில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்ப அலை வீசக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாளை (மே 1) இயல்பை விட 3 முதல் 4 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மே 2 முதல் மே 5ஆம் தேதி வரையில் இயல்பை விட 3 முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை வெப்ப அலை வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 

இதனால், வெப்பம் 39ல் இருந்து 43 டிகிரி செல்சியஸ் வரை பதிவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வெப்ப அலையும் வீசுவதால் மதியம் 12 மணி முதல் 3 மணி வரையில் வெளியே செல்வதையும் பொதுமக்கள் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.  

இந்தாண்டு இயல்புக்கு முன்னதாகவே வெயிலின் தாக்கம் உக்கிரமாக உள்ளது. காலை 7 மணி முதலே வெயிலின் கொடுமையை தாங்க முடியாமல் மக்கள் கடுமையாக பாதிப்படைந்து வருகின்றனர். குறிப்பாக வெளியே சென்று வேலை பார்ப்பவர்கள் கடும் வெயிலால் சோர்வடைகின்றனர். இதனால் பல பொது இடங்களில் ORS கொடுக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. 

பலர் கோடை வெயிலை சமாளிக்க முடியாமல், மலைப்பிரேதசங்களுக்கு படை எடுக்கும் நிலையில், வெளியூர் செல்ல முடியாதவர்கள் மழையையே ஒரு முக்கிய எதிர்பார்ப்பாக கொண்டுள்ளனர்.

தொடர்ந்து வானிலை அறிக்கையில், தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு கீழடுக்கு வளிமண்டல சுழற்சி நிலவுவதால், மே 2 முதல் மே 5 வரை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் மஞ்சள் அலர்ட் விடுத்துள்ளது. பொதுமக்கள் பகல் நேரங்களில் வெயியே சுற்ற வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow