Exclusive: மந்த கதியில் மாநில கல்விக் கொள்கை திட்டம்.. தமிழ்நாடு அரசு அமல்படுத்த தயங்குவது ஏன்?
மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கைக்கு மாற்றாக தமிழக அரசு முன்வைத்த மாநில கல்விக்கொள்கை இதுவரை அமலாகாதது ஏன் என்ற கேள்வி மக்களிடையே எழுந்துள்ளது.
2017ஆம் ஆண்டு இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் முன்னாள் தலைவரான கஸ்தூரி ரங்கன் தலைமையில் குழு அமைக்கப்பட்டு, மத்திய அரசால், புதிய கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டது. இந்நிலையில், புதிய கல்விக் கொள்கையில் இடம்பெற்ற மும்மொழிக் கொள்கை உள்ளிட்டவை விமர்சனத்திற்கு உள்ளாகின.
இந்நிலையில், மத்திய அரசின் தேசிய கல்வி கொள்கைக்கு மாற்றாக, தமிழக அரசின் சார்பில் மாநில கல்விக் கொள்கை உருவாக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதற்காக, மாநில கல்விக் கொள்கையை உருவாக்க ஓய்வுபெற்ற நீதியரசர் முருகேசன் தலைமையில், 13 பேர் கொண்ட குழு 2022ஆம் ஆண்டு ஜூன் மாதம் அமைக்கப்பட்டது.
இந்த குழுவானது 2023ஆம் ஆண்டு மே மாதத்திற்குள் தமிழக அரசுக்கு அறிக்கை அளிக்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து கூடுதலாக நான்கு மாதம் அவகாசம் வழங்கப்பட்டது. அந்த வகையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மாநில கல்விக் கொள்கைக்கான அறிக்கை இறுதி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து மாநில அரசிடம் மாநில கல்விக் கொள்கைக்கான அறிக்கையினை, முதல்வரை நேரில் சந்தித்து சமர்ப்பிக்க ஓய்வு பெற்ற நீதியரசர் முருகேசன் அரசிடம் அனுமதி கோரினார். ஆனால் 6 மாதமாகியும், இதுவரை முதல்வரை நேரில் சந்திக்க அனுமதி வழங்கப்படவில்லை என தெரிகிறது.
மாநிலக் கல்விக் கொள்கைக்கான அறிக்கை தயார் செய்யப்பட்டும் அரசிடம் வழங்க முடியாத நிலை தொடர்ந்து வருகிறது. இதனால் மாநில கல்விக் கொள்கையை அமல்படுத்த அரசு தயாராக இல்லையா என்கின்ற கேள்வி மக்களிடையே எழுந்துள்ளது.
மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கைக்கு மாற்றாக தமிழக அரசு புதிய கல்விக் கொள்கையை உருவாக்கி அதனை முழுவதுமாக அமல்படுத்தப்படும் என தமிழக அரசு தெரிவித்து வேகம் காட்டிய நிலையில், தற்போது வரை அறிக்கையினை பெறுவதற்கு கூட அரசு நேரம் ஒதுக்காதது மாநில கல்விக் கொள்கையை அமல்படுத்தும் விஷயத்தில் அரசு பின்வாங்குகிறதா என்ற சந்தேகமும் எழுகிறது.
What's Your Reaction?