மீண்டும் மீண்டுமா...! ஜாமின் கோரி உச்சநீதிமன்றத்தில் செந்தில்பாலாஜி மனுதாக்கல்...தற்போது என்ன காரணம்..?
தனது உரிமைகள் பாதிக்கப்படுவதாக செந்தில்பாலாஜி உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல்.
சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி ஜாமின் கோரி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.
கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில்பாலாஜி வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி செய்ததாக குற்றம்சாட்டப்பட்டு வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து வழக்கை விசாரித்த அமலாக்கத்துறை, செந்தில்பாலாஜி சட்டவிரோத பணப் பரிமாற்றம் செய்திருப்பதாக கூறி கடந்தாண்டு ஜூன் 14ஆம் தேதி அவரை கைது செய்தது. தற்போது அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் இதுதொடர்பாக அமலாக்கத்துறை தொடுத்த வழக்குகள் சென்னை முதன்மை நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இதனிடையே தனது உடல்நிலையை காரணம் காட்டி செந்தில்பாலாஜி முதன்மை நீதிமன்றம், உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்தில் ஜாமின் கோரியபோது, அமலாக்கத்துறை அதற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்தது. அத்துடன் அவரது மனுக்களும் நிராகரிக்கப்பட்டதால் செந்தில்பாலாஜியின் நீதிமன்ற காவலும் 26-வது முறை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், செந்தில்பாலாஜி மீதுள்ள வழக்குகளை 3 மாதத்திற்குள் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய, சென்னை உயர்நீதிமன்றம், முதன்மை நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டிருந்தது. இதனிடையே, மீண்டும் ஜாமின் கோரி செந்தில்பாலாஜி சார்பாக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், தான் கைது செய்யப்பட்டு பல நாட்கள் ஆகிவிட்டது என்றும், தன்னை அமலாக்கத்துறை விசாரித்து முடித்தபோதும் சிறையிலேயே அடைத்து வைத்திருக்கிறது எனவும், இதனால் தனது உரிமைகள் பாதிக்கப்படுகிறது என்றும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மனுவை உச்சநீதிமன்ற வழக்கறிஞர் ராம்சங்கர் தாக்கல் செய்துள்ள நிலையில்,மனு மீதான விசாரணை விரைவில் உச்சநீதிமன்றத்தில் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
What's Your Reaction?