ஜாமின் கிடைக்காமல் தவிக்கும் செந்தில் பாலாஜி! மீண்டும் தீர்ப்பை ஒத்திவைத்த நீதிமன்றம்...
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, ஜாமின் கோரி தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சட்டவிரோத பணபரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து, ஜாமின் கோரி செந்தில்பாலாஜி தாக்கல் செய்த மனுவுக்கு அமலாக்கத்துறை கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இதையடுத்து இரண்டாவது முறையாக ஜாமின் கோரி மீண்டும் தாக்கல் செய்த மனு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் இன்று (21.02.2024) விசாரணை வந்தது. அப்போது பணப்பரிமாற்ற வழக்கு தொடர்பான ஆதாரங்கள் அனைத்தும் மற்றொரு புலனாய்வு அமைப்பால் சேகரிக்கப்பட்டவை; அமலாக்கத்துறை எந்த ஆதாரத்தையும் திருத்தவும் இல்லை, அனைத்தும் நேர்மையான ஆவணங்கள்தான் என அமலாக்கத்துறை தரப்பில் வாதிடப்பட்டது.
தொடர்ந்து செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஆரியமா சுந்தரம், "அமலாக்கத்துறை பல ஆவணங்களை திருத்தியுள்ளது. நேரடியாக செந்தில் பாலாஜி மீதான குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை. செந்தில் பாலாஜி மீதான 30 வழக்குகளும், தேர்தல் தொடர்பானவை, போராட்டங்கள் தொடர்பானவை. முறைகேடுக்கான ஆதாரமும், முகாந்திரமும் இல்லாமல் சட்டவிரோத பணபரிவர்த்தனை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. செந்தில்பாலாஜி தற்போது அமைச்சராக இல்லாத நிலையில், நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு அவரை ஜாமினில் விடுவிக்க வேண்டும்" என வாதிட்டார்.
இருதரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்துவைத்து உத்தரவிட்டார்.
What's Your Reaction?