Sivakarthikeyan: தோளில் பச்சை துண்டு... இது மிகப்பெரிய புரட்சி... சிவகார்த்திகேயனின் திடீர் அவதாரம்!

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் நடைபெற்ற தேசிய நெல் திருவிழாவில் நடிகர் சிவகார்த்திகேயன் பங்கேற்ற வீடியோ வைரலாகி வருகிறது.

Jun 22, 2024 - 17:54
Sivakarthikeyan: தோளில் பச்சை துண்டு... இது மிகப்பெரிய புரட்சி... சிவகார்த்திகேயனின் திடீர் அவதாரம்!

திருத்துறைப்பூண்டி: சிவகார்த்திகேயனின் அமரன் திரைப்படம் இந்தாண்டு இறுதிக்குள் ரிலீஸாகவுள்ளது. இன்னொரு பக்கம் ஏஆர் முருகதாஸ் இயக்கும் படத்தில் பிஸியாகிவிட்டார் சிவகார்த்திகேயன். அதேபோல், விஜய்யின் தி கோட் படத்தில் கேமியோவாக நடித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் நடைபெற்ற உலகப் புகழ்பெற்ற நெல் திருவிழாவில் சிவகார்த்திகேயன் பங்கேற்றார். நெல் ஜெயராமன் பாரம்பரிய நெல் பாதுகாப்பு மையம் சார்பில் இந்த விழா நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று விவசாயிகளை உற்சாகப்படுத்திய சிவகார்த்திகேயன், அவர்களுக்கு பாரம்பரியமான நெல் விதைகளையும் வழங்கினார். அதன்பின்னர் பேசிய சிவகார்த்திகேயன், இந்த விழாவை பிரம்மாண்டமாக நடத்தி வரும் விவசாயிகளுக்கு நன்றி தெரிவித்தார். மேலும், எனது அப்பாவின் சொந்த ஊருக்கு இந்த வழியாக தான் செல்வேன் என்றும், அதனால் இது எனக்கு பரீட்சயமான பகுதி தான் எனவும் கூறினார். அதேநேரம் இப்படியொரு விழாவில் பங்கேற்க திருத்துறைப்பூண்டிக்கு வந்துள்ளது என் வாழ்வில் மறக்க முடியாத ஒன்றாக அமைந்துவிட்டது என்றார். நம்மாழ்வார் ஐயாவை தொடர்ந்து நெல் ஜெயராமன் ஐயாவும் சத்தமே இல்லாமல் பெரிய சாதனை படைத்துள்ளனர்.

174 பாரம்பரிய நெல் விதைகளை மீட்டெடுத்து அதனை எல்லோருக்கும் பயன்படும்படி செய்திருப்பது யாராலும் செய்ய முடியாதது. அவர்கள் இருவரும் விதைத்துள்ள இந்த எண்ணம், இந்த திருவிழா இது எல்லாமே இன்னும் பல தலைமுறைகளுக்கானது. அதனால அவர்களுக்காக நாம் எது செய்தாலும் அது பத்தவே பத்தாது என நினைப்பதாகக் கூறினார். மேலும், நெல் ஜெயராமன் ஐயா பற்றி தெரிந்த பின்னர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றதும், விருதுகள் கொடுப்பதையும் உதவி என சொல்ல வேண்டாம். இது எனது கடமை, பலமுறை இந்நிகழ்ச்சிக்கு அழைத்தும் இதனை உதவியாக பேசிவிடக் கூடாது என்பதற்காக தான் இத்தனை நாட்களாக வரவில்லை எனக் கூறினார். 
  
அதேபோல், இதுபோன்ற பல விழாக்களை கடைசி வரிசையில் நின்று வேடிக்கை பார்த்தவன் தான் நான். அப்படி வேடிக்கை பார்த்த ஒருவனை இப்படி மேடையில் ஏற்றி மக்கள் முன்னால் நிற்க வைத்தது நீங்கள் தான் என்றார். ஆனால் எனக்கு விருது கொடுத்து அழகு பார்ப்பதை நினைத்து மகிழ்ச்சியாக உள்ளது எனவும், உழவர்களின் தோழன் என்ற இந்த விருது எனக்கு பெருமையாக இருப்பதாகவும் பேசினார். அதேநேரம் இந்த விருதுக்கு நான் தகுதியானவனா என்பது எனக்குத் தெரியவில்லை. உழவர்களுக்காக கடைசி வரை ஏதேனும் செய்துகொண்டே இருப்பேன், ஆனால் என்ன செய்ய வேண்டும் என்று தான் தெரியவில்லை என்றார். 

காய்கறிகளை என் குழந்தைகளுக்கு கொடுக்கும் போது எனது மனசு நிறைகிறது, அப்படி இருக்கும் போது விவசாயிகள் ஊரில் உள்ள குழந்தைகளுக்கு எல்லாம் கொடுத்து மகிழ்கிறார்கள்; இதைவிட பெரிய விஷயம் என்ன இருக்க முடியும் எனப் பேசினார். அதேபோல், நெல் திருவிழா என்ற பெயருக்கேற்ப இந்நிகழ்ச்சி உண்மையாகவே திருவிழா போல ஏற்பாடு செய்துள்ளனர். இதனை பார்க்கவே மகிழ்ச்சியாக எனக் கூறிய சிவகார்த்திகேயன், இப்படியொரு விழாவில் கலந்துகொண்டதற்காக சந்தோஷப்படுகிறேன் என்றார். இந்த நெல் திருவிழா அனைத்து தரப்பு மக்களிடமும் சென்று சேர வேண்டும் என்பதே எனது விருப்பம் எனவும் தெரிவித்தார். நிகழ்ச்சியின் இறுதியில் தோளில் பச்சைத் துண்டு போட்டபடி சிவகார்த்திகேயன் செய்தியாளர்களை சந்தித்தது குறிப்பிடத்தக்கது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow