ஓ.பன்னீர் செல்வத்தின் பலாப்பழத்திற்கு எதிராக கிளம்பிய ஓபிஎஸ்கள்.. குழம்பும் வாக்காளர்கள்

ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் வாளி, திராட்சை கரும்பு விவசாயி உள்ளிட்ட பல்வேறு சின்னங்களில் சுயேட்சை வேட்பாளர்களாக போட்டியிடும் ஒ.பன்னீர் செல்வங்களுக்கு ஆதரவாக பல இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது வாக்காளர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

Apr 12, 2024 - 15:20
ஓ.பன்னீர் செல்வத்தின் பலாப்பழத்திற்கு எதிராக கிளம்பிய ஓபிஎஸ்கள்.. குழம்பும் வாக்காளர்கள்

எப்படி இருந்த நான்.. இப்படி ஆயிட்டேன்.. என்ற சொல் தற்போதய சூழ்நிலையில் ஓ. பன்னீர் செல்வத்திற்கு நன்றாக பொருந்தும். நாடாளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயகக்கூட்டணியில் அங்கம் வகிக்கும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ராமநாதபுரம் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக ஓ.பன்னீர்செல்வம் போட்டியிடுகிறார். அவருக்கு பலாப்பல சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. 

 ஓ.பன்னீர்செல்வம் போட்டியிடும் ராமநாதபுரம் தொகுதியில், அதே பெயரில் மேலும் 5 பேர் போட்டியிடுகின்றனர். தனக்கு எதிராக சிலர் சதிச்செயலில் ஈடுபடுவதாக ஓ.பன்னீர்செல்வம் குற்றம் சாட்டியிருந்தார். முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு பலாப்பழ சின்னம் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், பன்னீர்செல்வம் பெயர் கொண்ட பிற சுயேட்சை வேட்பாளர்கள் திராட்சை கொத்து, கரும்பு விவசாயி, வாளி உள்ளிட்ட சின்னங்களில் போட்டியிடுகின்றனர். அனைவரும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், ராமநாதபுரம் தொகுதியில்  திரும்பிய திசை எங்கும் ஓபிஎஸ் என்ற போஸ்டர்கள் உள்ளன.  ஓ.பி.எஸ்.க்கு வாக்களிக்குமாறு, பல்வேறு சின்னங்களை கொண்ட சுவரொட்டிகள் தனித்தனியே ஒட்டப்பட்டுள்ளதால் வாக்காளர்கள் குழப்பம் அடைந்துள்ளனர். பலா பலத்திற்கு வாக்கு கேட்க வேண்டிய ஓ.பன்னீர் செல்வம் சில நாட்களுக்கு முன்பு இரட்டை இலைக்கு வாக்கு சேகரித்தார். அவரே பழக்க தோஷத்தில் சின்னத்தை மாற்றி கூறி பின்னர் ஒருவழியாக சமாளித்தார்.

தற்போது பரமக்குடி சுற்றுவட்டார பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரில், சின்னத்தை தவிர அனைத்து சொற்களும் ஒரே மாதிரியாக உள்ளது. முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு எதிராக அவரின் பெயரிலேயே போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது வாக்காளர்களை குழப்பமடைய செய்துள்ளது.

எனவே, வாக்காளர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்துவது மற்றும் தேர்தல் விதிமுறைகளை மீறி சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது குறித்து தேர்தல் அலுவலரை சந்தித்து புகார் அளிக்க ஓபிஎஸ் தரப்பினர் முடிவெடுத்துள்ளனர்.

தேர்தல் ஆணைய வழிகாட்டுதல்களை மீறி  சுவரொட்டிகள் ஒட்டியுள்ளதை கண்டித்தும் வாக்காளர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்துவதாக கூறியும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின்  வழக்கறிஞர்கள் தேர்தல் அலுவலரை சந்தித்து புகார் மனு அளிக்க உள்ளனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow