TVK Vijay: ராகுல் காந்திக்கு வாழ்த்து... தவெக தலைவர் விஜய்யின் ஸ்மார்ட் மூவ்?
மக்களவையில் எதிர்க் கட்சித் தலைவராக தேர்வாகியுள்ள ராகுல் காந்திக்கு, தவெக தலைவர் விஜய் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

சென்னை: விஜய் கடந்த 22ம் தேதி தனது 50வது வயதில் அடியெடுத்து வைத்தார். அதேநேரம் கள்ளக்குறிச்சி கள்ளச்சாரயம் சம்பவம் காரணமாக, தனது பிறந்தநாளை கொண்டாட வேண்டாம் என தவெக நிர்வாகிகளுக்கு அவர் உத்தரவிட்டிருந்தார். சினிமாவில் இருந்து விரைவில் அரசியலுக்கு வரவிருக்கும் விஜய், அதற்கான முதற்கட்ட வேலைகளை ஜரூராக தொடங்கிவிட்டார். ஏற்கனவே தனது படங்களின் ஆடியோ லான்ச், வெற்றி விழா ஆகியவற்றை அரசியல் கட்சி மாநாடு ரேஞ்சுக்கு மாற்றிவிடுகிறார் விஜய். அதாவது குட்டி ஸ்டோரி சொல்லியே தனது அரசியல் என்ட்ரி குறித்து ரசிகர்களுக்கு சிக்னல் கொடுத்து வந்தார்.
இப்போது நேரிடையாகவே விஜய் அரசியல் பேசி வருவது பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது. தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை அறிவித்த விஜய், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நிதியுதவி, பொதுமக்களுக்கு நிவாரணம் ஆகியவற்றை தனது கட்சி நிர்வாகிகள் மூலம் வழங்கி வருகிறார். அதேபோல், சமீபத்தில் கள்ளக்குறிச்சி சென்ற விஜய், கள்ளச்சாராயம் அருந்தி பாதிக்கப்பட்டவர்களையும் அவர்களது குடும்பத்தினரையும் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். முன்னதாக நாடாளுமன்றத் தேர்தல் முடிவு வெளியான பின்னர், விசிக தலைவர் திருமாவளவன், நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் இருவருக்கும் வாழ்த்துத் தெரிவித்திருந்தார்.
அதேபோல், விஜய்யின் பிறந்தநாளுக்கு திமுக தவிர மற்ற அனைத்துக் கட்சி தலைவர்களும் பிரமுகர்களும் வாழ்த்துத் தெரிவித்திருந்தனர். பதிலுக்கு விஜய்யும் அவர்களுக்கு நன்றித் தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருந்தார். இப்படி தமிழக அரசியலில் தீவிரமாக களமாட தொடங்கிவிட்ட விஜய், அடுத்து டெல்லி பக்கமும் தனது கவனத்தை செலுத்தியுள்ளார். 2009ம் ஆண்டு காங்கிரஸ் பொதுச்செயலாளராக இருந்த ராகுல் காந்தியை நேரில் சந்தித்திருந்தார் விஜய். அப்போதே விஜய் காங்கிரஸில் இணைவார் என்றும், இல்லையென்றால் தனியாக கட்சி ஆரம்பித்த பின்னர் கூட்டணி வைப்பார் எனவும் சொல்லப்பட்டது.
ஆனால், அதன்பின்னர் 2014 மக்களவைத் தேர்தலின் போது, பிரதமர் வேட்பாளராக சென்னை வந்திருந்த மோடியை, விஜய் நேரில் சென்று சந்தித்தார். இந்த சம்பவத்திற்கு பிறகு விஜய் மீது பாஜகவின் பி டீம் என்ற முத்திரை விழுந்தது. மேலும் விஜய் கட்சி ஆரம்பித்தால் பாஜகவுக்கு ஆதரவு கொடுப்பார் எனவும் செய்திகள் வெளியாகின. இதனால், விஜய்யை பாஜகவின் தமிழக தத்துப் பிள்ளையாகவே அரசியல் விமர்சகர்கள் அடையாளம் காட்டி வந்தனர். இந்நிலையில், தற்போது மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக தேர்வாகியுள்ள ராகுல் காந்திக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார் விஜய்.
இதுகுறித்து ட்வீட் செய்துள்ள விஜய், மக்களவையில் எதிர்க் கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ராகுல் காந்திக்கு வாழ்த்துகள். மக்களுக்கு சேவையாற்றவும் வாழ்த்துகள் என பதிவிட்டுள்ளார். ராகுல் காந்திக்கு விஜய் வாழ்த்துக் கூறியுள்ளது அரசியல் வட்டாரத்தில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக நரேந்திர மோடி, 3வது முறையாக பிரதமராக பொறுப்பேற்றதற்கும் விஜய் வாழ்த்துத் தெரிவித்து ட்வீட் செய்திருந்தார். ஆனால், அதில் மக்களுக்கு சேவையாற்ற வாழ்த்துகள் என விஜய் குறிப்பிடவில்லை. ராகுல் காந்திக்கு தனியாக அந்த ஒரு வார்த்தையும் விஜய் சேர்த்துள்ளதால், இதை வைத்தே பெரிய டாக் கிரியேட்டாகியுள்ளது.
இந்திய அளவில் ராகுல் காந்திக்கு நாளுக்கு நாள் மக்களிடம் செல்வாக்கு கூடி வருவதால், காங்கிரஸ் பக்கம் செல்ல விஜய் இப்போதே ரெடியாகிவிட்டார். இது சம்பிரதாயமான வாழ்த்து போல தெரிந்தாலும், விஜய் டெல்லி அரசியலிலும் கவனம் செலுத்தத் தொடங்கிவிட்டார் என நெட்டிசன்கள் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.
What's Your Reaction?






