உதயநிதி ஸ்டாலின் துறைக்கு மட்டும் இத்தனை கோடியா? என்னென்ன சிறப்பு அறிவிப்புகள்..?

2024-2025 நிதி ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டில் இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறைக்கு ரூ.440 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது

Feb 19, 2024 - 13:47
Feb 19, 2024 - 14:58
உதயநிதி ஸ்டாலின் துறைக்கு மட்டும் இத்தனை கோடியா?  என்னென்ன சிறப்பு அறிவிப்புகள்..?

இளைஞர் நலம் மற்றும் விளையாட்டுத் துறைக்கு தமிழக பட்ஜெட்டில் ரூ.440 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு அரசின் 2024-2025 நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை இன்று தமிழக சட்டப்பேரவையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டார்.இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை குறித்த தனது உரையில் விளையாட்டுத்துறை தொடர்பாக பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அவை:-

•    சென்னை, மதுரை, திருச்சி, நீலகிரி மாவட்டங்களில் நான்கு ஒலிம்பிக் பயிற்சி மையங்கள் நிறுவப்படும்; இறகுப் பந்து, கையுந்துப் பந்து, தடகளம், கூடைப்பந்து போன்ற விளையாட்டுகளுக்கான பயிற்சி அங்கு அளிக்கப்படும். மேலும் அவை விளையாட்டு அறிவியலுக்கான மையங்களாக செயல்படும்.

•    முதலமைச்சரின் இளைஞர் திருவிழாக்கள் தமிழ்நாடு முழுக்க நடத்தப்படும். இளைஞர்களின் கலைத் திறமைகளை வெளிக்கொண்டு வரும் விதமாக, பேச்சு, பாட்டு, இசை எனப் பன்முகப் போட்டிகள் நடத்தப்படும்.   

•    கிரிக்கெட், கையுந்துப் பந்து, கால்பந்து, இறகுப்பந்து, சிலம்பம் உள்ளிட்ட 33 விளையாட்டுகள் மற்றும் உடற்பயிற்சிக்குத் தேவையான கருவிகள்  அடங்கிய கலைஞர் விளையாட்டுத் தொகுப்புகள் அனைத்து தமிழ்நாடு முழுக்க ஊராட்சிகளிலும் வழங்கப்படும்.

•    மாற்றுத் திறனாளிகளுக்கு இந்தியாவிலேயே முதல்முறையாக 6 விளையாட்டு மையங்கள் அமைக்கப்படுகின்றன. மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு இறகுப்பந்து, கையுந்துப் பந்து, வாள் வீச்சு உள்ளிட்ட ஆடுகளங்கள் அங்கு அமைக்கப்படுகின்றன.

•    கடல்சார் நீர் விளையாட்டுகளில் இளைஞர்களின்  ஆர்வத்தை ஈர்த்திடவும் நீர் விளையாட்டுப் போட்டிகளுக்கான உலகத் தரம் வாய்ந்த கட்டமைப்பை ஏற்படுத்தவும் இந்தியாவிலேயே முதல்முறையாக தமிழ்நாடு ஒலிம்பிக் நீர் விளையாட்டு அகாடமி, ராமநாதபுரம் மாவட்டத்தில் பிரப்பன் வலசை அமைக்கப்படும்.

ஒட்டுமொத்தமாக, 2024-2025 நிதி ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டில் இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறைக்கு ரூ 440 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow